×

டிராக்டரில் சிக்கி பைக்குடன் இழுத்து சென்றதில் எஸ்ஐ காயம் ஆரணி அருகே பரபரப்பு மணல் கடத்தியதால் விரட்டி பிடித்தபோது

ஆரணி, மார்ச் 25: ஆரணி அருகே கமண்டல நாகநதி ஆற்றில் மணல் கடத்தியவரை விரட்டி பிடித்தபோது டிராக்டரில் பைக்குடன் சிக்கி இழுத்துச்செல்லப்பட்ட எஸ்ஐ காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் சத்தியமூர்த்தி சாலையில் டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக டவுன் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜனுக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆரணி அடுத்த மேல்சீசமங்கலம் பகுதியில் உள்ள கமண்டல நாகநதி ஆற்றில் இருந்து மணல் கடத்தி கொண்டு அதிவேகமாக வந்த டிராக்டரை போலீசார் நிறுத்த முயன்றனர்.

அப்போது, போலீசாரை கண்டதும் அந்தநபர் டிராக்டரை நிறுத்தாமல் சென்றார். உடனே, போலீசார் டிராக்டரை மடக்கி பிடிக்க பைக்குகளில் துரத்தி சென்றனர். இதில், எதிர்பாராத விதமாக மணல் கடத்தி சென்ற டிராக்டரில் எஸ்எஸ்ஐ தன்ராயன் ஓட்டிச்சென்ற பைக் மோதியது. மேலும் டிராக்டரில் பைக் சிக்கிக்கொண்டது. ஆனாலும் மணல் கடத்தல்காரர் டிராக்டரை உடனடியாக நிறுத்தாததால், எஸ்ஐ பைக்குடன் சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டார். பின்னர் கடத்தல்காரர் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்றார். அப்போது போலீசார் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் கடத்தல்காரரை மடக்கி பிடித்தனர்.

மேலும் பைக்குடன் டிராக்டரில் சிக்கி காயமடைந்த எஸ்எஸ்ஐ தன்ராயன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மணல் கடத்தி சிக்கியவரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் ஆரணி அடுத்த நெசல் கிராமத்தை சேர்ந்த ரஜினி(39) என்பதும், அவர் தொடர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது, உடனே போலீசார் ரஜினியை கைது ஆரணி குற்றவியில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

Tags : SI ,Arani ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...