×

சென்னை விமான நிலையத்தில் புதிய முனைய திறப்பு விழா தள்ளிவைப்பு

சென்னை, மார்ச் 25: சென்னை விமான நிலையத்தில் புதிய முனைய திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், ரூ.2400 கோடி திட்ட மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் புதிய ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல்கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்தன. மொத்தம் 5 தளங்களுடன் கூடிய புதிய விமான நிலையத்தின் கீழ்தளத்தில், பயணிகளின் உடைமைகள் கையாள வசதி செய்யப்பட்டுள்ளன. தரைதளத்தில் சர்வதேச பயணிகள் வருகை பகுதியாக, பயணிகளுக்கான வழக்கமான நடைமுறைகள் கையாளப்படும். 2வது தளத்தில், பயணிகளின் புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மற்ற தளங்களில் விமான நிறுவன அலுவலகங்கள், பயணிகள் ஓய்வறை மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன.
தற்போது இந்த கட்டிடத்தில் நவீன கருவிகள், உபகரணங்கள் பொருத்தப்பட்டு, சோதனைகள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக, புதிய முனையத்தின் கீழ்தளத்தில், விமான பயணிகள் உடைமைகள் கையாளப்படும் பணிகள் கடந்த 10ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்த புதிய முனையத்தில் உள்ள மல்டிலெவல் கார் பார்க்கிங், ஷாப்பிங் மால், திரையரங்குகள் போன்றவற்றை கடந்த பிப்ரவரி 4ம் தேதி விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் முறைப்படி துவக்கிவைத்தார்.

இதைத்தொடர்ந்து, ஒட்டுமொத்த புதிய முனையத்தின் பயன்பாட்டை வரும் 27ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைப்பார் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இதன் திறப்புவிழா தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய முனையத்தின் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றாலும், அங்கு மின்கருவிகள், இயந்திரங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்காக தெற்கு மண்டலத்தில் உள்ள 12 விமானநிலைய மின் பொறியாளர்கள் மூலம் இரவு, பகலாக பணிகள் நடந்து வருகின்றன.

இப்பணிகள் முடிவடைந்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் தடையில்லா சான்றிதழ் கிடைத்த பிறகுதான், புதிய முனையத்தை பிரதமர் வந்து திறந்துவைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, வரும் 27ம் தேதி நடைபெற இருந்த புதிய முனைய திறப்புவிழா தள்ளிவைக்கப்படுகிறது. பணிகள் அனைத்தும் நிறைவடைந்தபின், அடுத்த மாதம் 14ம் தேதி புதிய முனையத்தை பிரதமர் திறந்துவைத்து, நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பார் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Tags : Chennai airport ,
× RELATED மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்