தூத்துக்குடி வக்கீல் கொலையில் மேலும் ஒருவர் கைது

தூத்துக்குடி, மார்ச் 25:தூத்துக்குடி சோரீஸ்புரத்தைச் சேர்ந்த பிச்சைக்கண்ணன் மகன் முத்துக்குமார்(48). தூத்துக்குடி கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார். மேலும் கலெக்டர் அலுவலகம் அருகே நகைக்கடன் வழங்கும் நிறுவனமும் வைத்திருந்தார். கடந்த பிப்.22ம் தேதி நிதிநிறுனத்திற்கு வந்த முத்துக்குமார், இரு பைக்குகளில் வந்த 5 பேரால் படுகொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி சிப்காட் போலீசார் கோவை சிறையில் உள்ள கோரம்பள்ளம் ராஜேஷ், அவரது அண்ணன் ஜெயப்பிரகாஷ்(35) உள்ளிட்ட 13பேர் மீது  வன்கொடுமை மற்றும் கொலை வழக்குப்பதிந்து தேடி வந்தனர். இந்த வழக்கில் 5 பேர் சரணடைந்தனர். 5 பேர் கைது செய்யப்பட்டனர். எஸ்ஐ ராஜபிரபு தலைமையிலான தனிப்படையினர் ஜெயப்பிரகாஷ் சுட்டுப்பிடித்தனர்.

இந்நிலையில் வைகுண்டத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி(32) என்பவர் சென்னை கோர்ட்டில் சரணடைந்தார். மேலும் தலைமறைவாக உள்ள ராஜேஷின் மற்றொரு சகோதரரான முருகேசன் என்பவரையும் தனிப்படையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைதான முருகேசன் கடந்த 2019ல் கொல்லப்பட்ட வக்கீல் முத்துக்குமாரின் சகோதரர் சிவக்குமார் கொலையில் 21வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு தொடர்ந்து தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் மதுரை ஜேஎம் கோர்ட்டில் சரணடைந்த கூலிப்படையை சேர்ந்த ஆறுமுகநேரி சீனந்தோப்பு சிங்கராஜா மகன் வேல்முருகன்(25), தென்காசி மாவட்டம் கீழகடையத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் ராஜரத்தினம்(25), திருவள்ளூர் மாவட்டம் பெரும்பேடு ஜெயக்குமார் மகன் இலங்கேஸ்வரன்(30) ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி பாலாஜி சரவணன் கலெக்டரிடம் பரிந்துரைத்தார். கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் வேல்முருகன், ராஜரத்தினம், இலங்கேஸ்வரன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: