கண்மாய், கால்வாய் ஆக்கிரமிப்பாளர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

மதுரை: மதுரை மாவட்டத்தில், கண்மாய், கால்வாய் ஆக்கிரமிப்பாளர்களை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் விவேகானந்தன், கூட்டுறவுத்துறை இணை இயக்குநர் குருமூர்த்தி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முருகேசன் மற்றும் பொதுப்பணித்துறை, தோட்டக்கலைத்துறை, மின்வாரியம் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், ‘‘மேலூர் பகுதியில் நெல் அறுவடை பணிகள் முடிந்து ஏறத்தாழ 2 மாதங்களாகி விட்டது. அங்கு, தற்போது வியாபாரிகள் நெல்லை கொண்டு வந்து, கொள்முதல் மையத்தில், விற்பனை செய்யப்படுகிறது. எனவே, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்ட மேலூர் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக மூட வேண்டும்’’ என கூறினர். அப்போது இதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொள்முதல் மையம் திறப்பதற்கு முன் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் தங்கள் வீட்டில் வைத்திருந்தனர். தற்போது அந்த நெல்லை விவசாயிகள், கொள்முதல் மையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இவர்கள் வியாபாரிகள் அல்ல. தவறான கருத்தை இந்த கூட்டத்தில் தெரிவிக்கக்கூடாது. இதனால், நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்றனர். இதனால், இரு தரப்பினருக்கிடையே கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

மேலும் விவசாயிகள் பேசுகையில், ‘‘வெள்ளரிப்பட்டி கண்மாய்க்கு வரும், வரத்து வாய்க்கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும். பேரையூர் வட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது வாரம் செவ்வாய்க்கிழமைகளில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. ஆனால், அதில் வட்டாட்சியர் உள்ளிட்ட முக்கிய அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்பதில்லை. இதனால், விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க முடியவில்லை. பொட்டாஷ், டிஏபி போன்ற உரங்கள் தனியார் உர விற்பனை நிலையங்களில் மிக அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் இந்த விலை கொடுத்து, உரம் வாங்க முடியவில்லை. எனவே தேவைக்கேற்ற உரங்களை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்தாண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டு, சிறுதானிய உணவு மக்களிடம் பிரபலமாகி வருகிறது. சிறுதானியத்தில், அதிக சத்துள்ளது. இதனை மக்கள் உட்கொள்ளும் போது, சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வராது. எனவே, இதையொட்டி, சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில், சிறுதானிய உற்பத்திக்கு பஞ்சமி நிலங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கொட்டாம்பட்டி பெரிய அருவி சீரமைக்கப்படாததால் 5 ஆயிரம் ஏக்கருக்கான பாசனம் பாதிக்கப்படுகிறது. உடனடியாக அதனை சீரமைக்க வேண்டும். மாவட்டத்தில் எங்கு, எங்கு வசதியுள்ளதோ அந்த பகுதியில், நீர்வழிச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் அரசு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் வட்டாரத்தில், விவசாய விளைநிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்மாய், கால்வாய் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க, கண்மாயை ஆக்கிரமிப்பவர்களை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாய கூலித்தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால், கேழ்வரகு உள்ளிட்ட அனைத்துவகை சிறுதானியங்கள் அறுவடைக்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும்’’ என்றனர். கலெக்டர் பேசுகையில், ‘சிறுதானிய உற்பத்திக்கு தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இதற்காக மானியம் வழங்கப்படுகிறது. கண்மாய், கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெல் கொள்முதல் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டால், மையம் மூட நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகள் நெல் விற்பனை செய்வதை அனுமதிக்க முடியாது’’ என்றார்.

Related Stories: