ஏழாயிரம்பண்ணையில் குறுகலான சாலையால் போக்குவரத்திற்கு இடையூறு: நடவடிக்கை எடுக்குமா நெடுஞ்சாலை துறை

ஏழாயிரம்பண்ணை, மார்ச் 24: ஏழாயிரம்பண்ணையில் குறுகலான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகனஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சிக்குட்பட்டது ஏழாயிரம்பண்ணை கிராமம். இப்பகுதியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சுற்றி 100க்கும் மேற்பட்ட பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள் சிறிய மற்றும் பெரிய அளவில் இயங்கி வருகின்றன. சாத்தூரில் இருந்து சங்கரன்கோவில் மற்றும் கோவில்பட்டிக்கு, ஏழாயிரம்பண்ணை பஜாரை கடந்து தான் செல்ல வேண்டும். மேலும் இந்த வழியாக தினமும் பட்டாசு தொழிற்சாலை வாகனம், அரசு மற்றும் தனியார் பேருந்து உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து சென்று வருகின்றன.

20 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் அப்போதைய மக்கள்தொகைக்கு ஏற்ப குறுகலான சாலை அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் மக்கள்தொகை மற்றும் வாகனங்களின் தேவை அதிகரித்து வந்த நிலையில் நெடுஞ்சாலைதுறை சார்பில் இப்பகுதியில் சாலையை அகலபடுத்தும் பணி மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றம் என எதுவுமே நடைபெறவில்லை. இதுகுறித்து இப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும், நெடுஞ்சாலைதுறைக்கும் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இப்பகுதியில் அதிகளவில் பள்ளிகள் மற்றும் பட்டாசு- தீப்பெட்டி தொழிற்சாலைகள் இருப்பதால் காலை, மாலையில் மாணவ- மாணவிகள் மற்றும் தொழிலாளர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் அதிகளவு வந்து செல்கின்றன.

இதனால் ஏழாயிரம்பண்ணை பஜார் சந்திப்பு பகுதியில் அடிகடி வாகன நெரிசல் ஏற்பட்டு, வாகனஓட்டுனர்கள் இடையே கடும் வாக்குவாதமும் ஏற்படுகிறது. இதுதவிர இந்த சந்திப்பு வளைவு பகுதியாக உள்ளதால் எதிரே வரும் வாகனங்களும் தெரிவதில்லை. மேலும் இப்பகுதி பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்படும் விபத்து மற்றும் வாகன விபத்து ஏற்படும் பட்சத்தில், காயமடைந்தவர்களை ஏழாயிரம்பண்ணையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தான் முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகின்றனர்.

அச்சமயம் இதுபோன்ற வாகன நெரிசல் ஏற்படும் போது உயிரிழப்புகளும் ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது. மேலும் பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வெடி விபத்துகள் ஏற்படும் போது அவரச உதவிக்கு செல்லும் தீயணைப்பு வாகனங்களும் இந்த நெரிசலில் சிக்குவதால் பல்வேறு இடையூறுக்கு பின்னர் தாமதமாகவே செல்கின்றன. எனவே நெடுஞ்சாலைதுறையினர் ஏழாயிரம் பண்ணை பகுதியில் உள்ள சாலையை அகலப்படுத்தி, ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன் காலை, மாலை நேரங்களில் போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும் என பொதுமக்கள், வாகனஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: