தேனி அருகே அரிவாளை காட்டி பணம் செல்போன்கள் வழிப்பறி

தேனி, மார்ச் 24: தேனி அருகே அம்மச்சியாபுரம் சாலையில் தனியார் செல்போன் நிறுவன ஊழியரிடம் அரிவாளை காட்டி மிரட்டி, பணம் மற்றும் செல்போனை வழிப்பறி செய்தவர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். தேனி மாவட்டம், குச்சனூர் பகுதியில் உள்ள கு.ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குணாளன் மகன் முத்துச்செல்வம்(32). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் டிஸ்ட்ரிபியூட்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த செவ்வாய் கிழமை இரவு தேனி அருகே அம்மச்சியாபுரத்திற்கு டூவீலரில் சென்று வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூலித்து விட்டு வந்து கொண்டிருந்தார்.

அம்மச்சியாபுரத்தில் இருந்து அரண்மனைப்புதூர் செல்லும் சாலையில் அய்யனார்புரம் வளைவில் வந்தபோது, சுமார் 25 மதிக்கத்தக்க 4 பேர் முத்துச்செல்வத்தை மறித்து நிறுத்தினர். பின்னர் தங்களிடம் இருந்த அரிவாளை வைத்து முத்துச்செல்வத்திடம் உள்ள பணம் பொருளை தருமாறு மிரட்டினர். இதனால் உயிர்பயத்தில், முத்துச்செல்வம் தான் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 3 செல்போன்கள், ரூ.5 ஆயிரம் பணம், ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 2 புளுடூத் ஆகியவற்றை கொடுத்தார். பணம், பொருட்களை பறித்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இது குறித்து முத்துச்செல்வம் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: