×

முதலமைச்சரின் வாழ்க்கை பயண கண்காட்சி திருக்குறள் புத்தகங்கள் வழங்கி மாணவர்களுக்கு வரவேற்பு

மதுரை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயண கண்காட்சிக்கு வரும் மாணவர்கள் திருக்குறள் புத்தகங்கள் வழங்கி வரவேற்கப்பட்டனர். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, எம்எல்ஏ கோ.தளபதி, மாவட்டச் செயலாளர் மணிமாறன் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் மதுரை வடக்கு, மாநகர் மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் இணைந்து ‘‘மக்கள் பயணத்தில் மாண்புமிகு முதலமைச்சர்’’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் திமுக பேரியக்கத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் 70 ஆண்டுகால வாழ்க்கை பயணம் குறித்த பிரமாண்ட புகைப்பட கண்காட்சியை மதுரை ஊமச்சிகுளம் மேனேந்தல் திடலில் நடத்தி வருகின்றனர்.

பொதுவாழ்க்கையில் முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் போராட்டங்கள், அவர் சந்தித்த துயரங்கள், அனுபவங்களால் படிப்படியாக தலைவராக உருவான விதம் குறித்த புகைப்படங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இக்கண்காட்சியில் நாடாளுமன்றம் பின்னணியில் இருக்க முன்னால் நிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட் அவுட் அருகில் இருந்து மக்கள் புகைப்படம் எடுத்து அதை பிரின்ட்டாக பெற்றுச்செல்கின்றனர்.

இந்நிலையில் கண்காட்சிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு நேற்று திருக்குறள் புத்தகங்கள் வழங்கி வரவேற்பு கொடுக்கப்பட்டது. மாநகர் திமுக சார்பில் மாநகராட்சி 70வது வார்டு கவுன்சிலர் அமுதா தவமணி மற்றும் திமுகவினர் திருக்குறள் புத்தகங்களை மாணவர்களிடம் வழங்கினர். பகுதிச்செயலாளர் தவமணி, வட்டச்செயலாளர் பாலசிவக்குமார், பொறுப்பாளர்கள் தனசேகர், சேதுராமநாதன், சீனிவாசன், ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். கண்காட்சி திடலில் அமைக்கப்பட்டுள்ள சறுக்கு மற்றும் ஸ்பிரிங்க் ஜம்ப் போன்றவற்றில் பொதுமக்கள் குழந்தைகளை ஏற்றி விளையாடவிட்டு பொழுது போக்கிச்சென்றனர்.

Tags : Minister ,Life Travel Exhibition Thirukkural ,
× RELATED டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை...