நிலக்கோட்டை மேட்டுப்பட்டியில் சித்தமகாலிங்க சாமி கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

நிலக்கோட்டை, மார்ச் 24: நிலக்கோட்டையை அடுத்த சித்தர்கள் நத்தம் கிராமம் மேட்டுப்பட்டி சித்தர் மலையில் அமைந்துள்ளது சித்தமகாலிங்க சாமி கோயில். சுமார் 600 ஆண்டுகள் பழமையான இக்கோயிலுக்கு செல்ல கரடு முரடான மலைப்பாதையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி குழு ஏற்படுத்தப்பட்டு இக்கோயிலில் புனரமைப்பு பணிகளை செய்து வந்தனர். சுமார் 1500 படிகள் மலைப்பாதையில் அமைக்கப்பட்டு, அடிப்படை வசதிகள், கூடுதல் கட்டிடம், மண்டபங்கள், வர்ணம் பூசும் பணிகள் நடந்து முடிந்தன.

தொடர்ந்து இக்கோயிலின் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 3 நாட்களாக பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாரியார் சாமிகள் தலைமையில் யாக வேள்விகள், பிரதிஷ்டை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நேற்று பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் தாரை தப்பட்டை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயில் ராஜ கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். பின்னர் சித்த மகாலிங்க சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன.

இதில் நிலக்கோட்டை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மற்றும் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர். மலையேறும் பக்தர்களின் நலன் கருதி கோயில் அடிவாரத்தில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகம் அமைக்கப்பட்டிருந்தது. நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: