உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் கிராமசபை கூட்டங்கள்: சுத்தமான குடிநீர் வழங்க தீர்மானம்

திருவள்ளூர். மார்ச் 23: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் கூட்டப்பட்டு, சுத்தமான குடிநீர், மழை நீர் சேகரிப்பு குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானத்தோடு நின்றுவிடாமல் உடனே களத்தில் இறங்கிய ஊராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் பாராட்டினர். பூந்தமல்லி: பூந்தமல்லி ஒன்றியம், கோலப்பன்சேரி ஊராட்சி மன்ற தலைவர்  விஜயபாபு தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய திமுக செயலாளர் கமலேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார், துணை வட்டார வளர்ச்சி  அலுவலர் பிரியா, ஒன்றிய கவுன்சிலர் சிவசாமி சுரேஷ், துணைத் தலைவர் நரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பூந்தமல்லி தொகுதி  எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து பேசியதாவது: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த சிறப்பு  கிராமசபையின் நோக்கம் குறித்தும், தண்ணீரின் முக்கியத்துவத்தையும்,  தேவையையும், எதிர்கால சந்ததியினரையும் கருத்தில் கொண்டு அனைவரும் தண்ணீரை  பயன்படுத்த வேண்டும் என்றார்.

இந்தியாவிலேயே வேளாண்துறைக்காக தனி பட்ஜெட்டை கொண்டு வந்து நிறைவேற்றி  வருபவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான். தமிழக  அரசு வேளாண்மை துறை மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு தென்னை மரக்கன்றுகளை  வழங்குகிறது. அவற்றை தங்களது வீடுகளில் நட்டு பயன் பெற வேண்டும். இந்த  ஊராட்சியில் உள்ள ஆதி திராவிட நலத்துறை ஆரம்ப பள்ளிக்கு 100 மேஜைகள்,  நாற்காலிகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வாங்கித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  ₹35 லட்சம் மதிப்பில் புதியதாக சமுதாயக்கூட கட்டிடம் கட்ட நடவடிக்கை  எடுக்கப்படும். வீட்டுமனை பட்டா இல்லாத ஏழை, எளியவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம் பேரிட்டிவாக்கம் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தில்லைகுமார் தலைமை தாங்கினார். இதில் அதிமுக ஆட்சியில் ஆற்றில் மணல் எடுத்ததால் நிலத்தடி நீர் சரியில்லை என்றும், குடிநீர் உப்பாக உள்ளது. குழாயில் மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வருகிறது என கிராமசபையை பெண்கள் முற்றுகையிட்டு சராமாரியாக கேள்வி கேட்டனர். இதற்கு ஊராட்சி தலைவர் தில்லைகுமார், அதை சரி செய்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். பின்னர் கூட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்வது, அரசு தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது.

இதேபோல் அனந்தேரி கிராமத்தில் நடந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவர் தையல் நாயகி தலைமை வகித்தார். இதில் அனந்தேரி பகுதியில் சேதமடைந்த 16 மின் கம்பங்களை மாற்றவேண்டும், ஊத்துக்கோட்டை மேம்பாலம் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும், அனந்தேரியில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சீரமைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேபோல் போந்தவாக்கம் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சித்ராபாபு தலைமை தாங்கினார். போந்தவாக்கம் காலணி விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் கட்டவேண்டும். ரேஷன்கடை கட்டுவது, கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதேபோல் நந்திமங்கலம் ஊராட்சியில் தலைவர் கீதாமுரளி தலைமை தாங்கினார். இங்கு புதுச்சேரி, நந்திமங்கலம் கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புழல்: புழல் ஊராட்சி ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சித் தலைவர் ஆஷா கல்விநாதன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வட்டார வளர்ச்சி அலுவலர் மம்மு கலந்து கொண்டு கிராம சபையை பார்வையிட்டார். அப்போது கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல், மழை நீரை சேமித்தல், ஊராட்சி திட்டப்பணி வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் பற்றாளராக டில்லி ராணி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விளாங்காடுப்பாக்கம் ஊராட்சித் தலைவர் பாரதி சரவணன் தலைமையிலும், புழல் ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் சரவணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கலாவதி நந்தகுமார், பற்றாளர் ஜனார்த்தனம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மழை நீரை சேமித்தல், பாதுகாப்பான குடிநீர் வழங்குவது, ஊராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதே போல் புள்ளிலைன் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வி ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையாக ₹1000 வழங்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு பாராட்டும், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு பணி, இதில் பயனாளிகளை தேர்வு செய்வது, சிறுதானிய உற்பத்தி மற்றும் அதன் நன்மை குறிக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல் சென்றம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராமு தலைமையிலும், தீர்த்தங்கரையம்பட்டு ஊராட்சி தலைவர் கவிதா டேவிட்சன் தலைமையிலும், கிரான்ட்லைன் ஊராட்சித் தலைவர் கமுதிஅரசு தலைமையிலும், வடகரை ஊராட்சி தலைவர் வழக்கறிஞர் ஜானகிராமன் தலைமையிலும் கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சிகளில் நடைபெற்றது. இதில் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் ஊராட்சியில் செய்ய வேண்டிய திட்டப்பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

சோழவரம்: சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி நடராஜன் தலைமையிலும், நல்லூர் ஊராட்சி தலைவர் அமிர்தவல்லி டில்லி தலைமையிலும், ஆங்காடு ஊராட்சி தலைவர் கிரிஜா நித்தியானந்தம் தலைமையிலும், சோழவரம் ஊராட்சி தலைவர் லட்சுமி முனி கிருஷ்ணன் தலைமையிலும், ஒரக்காடு ஊராட்சி மன்ற தலைவர் நிலா சுரேஷ் தலைமையிலும், ஆத்தூர் ஊராட்சி தலைவர் வழக்கறிஞர் சற்குணம் தலைமையிலும் மற்றும் பல்வேறு ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. இதில் ஊராட்சி துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள், அனைத்து மகளிர் சுய உதவி குழுக்கள், பொதுமக்கள் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைத்து ஊராட்சிகளிலும் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், ஊராட்சிகளில் நடைபெற உள்ள திட்டப்பணிகள் குறித்தும், வரவு செலவுகள் குறித்தும் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது.

அயப்பாக்கம்: ஊராட்சி மன்ற தலைவர் துரைவீரமணி தலைமையில், கிராம சபை கூட்டம் வள்ளுவர் வாசுகி சமூக நல கூடத்தில் நடந்தது. இக்கூட்டத்தில், 17 திட்டங்களை பற்றி விவாதிக்கப்பட்டது. உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஊராட்சியில் தண்ணீர் சேமிப்பிற்காக பல்வேறு திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. குடிநீர் சிக்கனத்தை கடைப்பிடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல். மழைநீரை சேமிப்பதற்காக அனைத்து குடியிருப்புகளிலும், மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைத்திட வலியுறுத்தப்பட்டது. குடிநீர் சேமிப்பு தொட்டிகள் அனைத்தையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டி வலியுறுத்தப்பட்டது. அயப்பாக்கம் பகுதியில் செயல்படும் கட்டிடங்கள், சாலைகள், மழைநீர் வடிகால்வாய்கள் முறையாக செயல்படுகிறதா எனவும் விவாதிக்கப்பட்டது. அயப்பாக்கம் பேரறிஞர் அண்ணா பூங்காவில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ₹25 லட்சம் செலவில் நூலக கட்டிடம் அமைக்கப்பட்டு பணிகளும் முடிவடைந்துள்ளது. அதற்கு மறைந்த கலைஞர் கருணாநிதி பெயரை சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றிய உடனே களப்பணி

பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாரிவாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தணிகாசலம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள நிறை, குறைகளை கிராம சபை கூட்டத்தில் தெரிவித்தனர். இந்த நிலையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் தண்ணீரை வீணாக்க கூடாது என தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் குழாய்களில் இருந்து வீணாகும் குடி நீரை நிறுத்தவும் தேவையில்லாமல் குடிநீர் பைப்புகளில் உடைந்து செல்லும் குடிநீரை தடுக்கவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து கூட்டம் முடிந்ததும் உடனடியாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே வீணாக செல்லக்கூடிய குடிநீரை தடுத்து நிறுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் தண்ணீரை சாலையில் வழிந்து செல்லும்படி இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கிராம சபை கூட்டத்தில் கடமைக்கு தீர்மானம் நிறைவேற்றாமல் தீர்மானம் நிறைவேற்றிய உடனே ஊராட்சி நிர்வாகம் களத்தில் இறங்கியது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

Related Stories: