செங்கல்பட்டு செவிலிமேடு ஏரியில் இறைச்சிக்காக விஷம் வைத்து கொல்லப்பட்ட நீர் பறவைகள்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

காஞ்சிபுரம், மார்ச் 23: செவிலிமேடு ஏரியில் இறைச்சிக்காக விஷம் வைத்து நீர் வாழ் பறவைகளை கொன்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம்  செவிலிமேடு பகுதியில் உள்ள ஏரியில் நீர்வள பறவைகளான உள்ளான், நாம கோழி  ஆகிய நீர் வாழ் பறவைகள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில், இந்த ஏரியில் உள்ள பறவைகளை பிடித்து விஷம் வைத்து, இறைச்சிக்காக சாகடித்துள்ளனர் என வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட வன அலுவலர் ரவிமீனா உத்தரவின்பேரில், காஞ்சிபுரம்  வன சரக அலுவலர் ராமதாஸ், வனக்காப்பாளர் பரணிதரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, வனத்துறையினர் வருவதை கண்ட மர்ம  நபர்கள், அங்கிருந்து தப்பி  ஓடிவிட்டனர். இதனையடுத்து, அங்கு இறந்து கிடந்த பறவைகளான உள்ளான் பறவை 6,  நாமகோழி பறவை 25 என 31 பறவைகளை  வனத்துறையினர் மீட்டு, வனத்துறை அலுவலகம் கொண்டு வந்தனர். பின்னர்  காஞ்சிபுரம் அரசு கால்நடை மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்கு அனுப்பி  வைத்தனர். அதனை தொடர்ந்து பறவைகள் எரியூட்டப்பட்டது. மேலும், காஞ்சிபுரம் வனத்துறையினர், நீர்வள பறவைகளை கொன்ற நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: