உலக தண்ணீர் தினத்தையொட்டி காஞ்சி, செங்கை மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: பொதுமக்கள் திரளாக பங்கேற்பு

செங்கல்பட்டு, மார்ச் 23: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் மெய்யூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார். பலாற்றில் தடுப்பணை அமைத்து நிலத்தடி நீரை சேமிக்கவும், பாலாற்றில் மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க அரசுக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற துணை தலைவர் பத்மாவதி சண்முகம் மற்றும் வார்டு உறுப்பினர்கள்  கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதேபோல், கள்ளபிரான்புரம் ஊராட்சியில் உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் சித்ரா தனசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால் கலந்துகொண்டு தண்ணீரின் முக்கியத்துவம் குறித்தும் மழைநீரை சேகரிப்போம், நீர் வளங்களை பாதுகாப்போம், புதியநீர் நிலைகளை அமைப்போம் என உறுதிமொழி ஏற்றனர். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வேடந்தாங்கல் ஊராட்சியில் நடந்த கூட்டம் ஊராட்சி தலைவர் வேதாசலம் தலைமையில் நடைபெற்றது. தண்ணீர் தினத்தில் தமிழ்நாடு அரசு  இந்த ஊராட்சிக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 2 கிணறுகள் அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற துணை தலைவர் கௌதமி அரிகிருஷ்ணன், ஊராட்சி செயலர் சாமிநாதன், உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மதுராந்தகம் ஒன்றியம் புக்கத்துறை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தையொட்டி, கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் சொருபராணி எழிலரசு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சித்ரா வெங்கடேசன் முன்னிலை வகித்தார். முன்னதாக ஊராட்சி செயலர் சுந்தர்ராஜ் அனைவரையும் வரவேற்றார். இதில், பற்றாளராக மதுராந்தகம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால கண்ணன் கலந்து கொண்டார். கூட்டத்தின்போது தண்ணீரின் அவசியம் குறித்தும் அதனை சேமிப்பது குறித்தும் வீடுகள் தோறும் மழைநீர்சேகரிப்பு தொட்டிகள் அமைப்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதில், ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வெள்ளபுத்தூரில் ஊராட்சி மன்ற தலைவர் வரதன் தலைமை தாங்கினார். துணை தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் துணை ஆட்சியர் இப்ராஹிம், மதுராந்தகம் வட்டாட்சியர் ராஜேஷ், கிராம நிர்வாக அலுவலர் ஜீவாகர் ஊராட்சி செயலர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது தண்ணீர் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு, அடுத்த ஆண்டிற்கான 100 நாள் வேலை திட்ட பணிகளை தேர்வு செய்வது, போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கரிக்கிலி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா கொடியான் தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் சண்முகம் பற்றாளராக கலந்து கொண்டார். இதில் கிராம நிர்வாக அலுவலர் முருகன் ஊராட்சி செயலர் அன்பரசு மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்யூர்: சூனாம்பேடு ஊராட்சி, ஒத்திவிளாகம் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் திருலோகசந்தர் முன்னிலை வகித்தார். முன்னதாக  ஊராட்சி மன்ற துணை தலைவர் விஜயா தெய்வசிகாமணி வரவேற்றார். கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினை விவாதித்தல், போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்தல், கிராம வளர்ச்சி மற்றும் குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள்,  கிராம நிர்வாக அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று பருக்கள் ஊராட்சியில்  ஊராட்சி மன்ற தலைவர் பிரபாவதி சிவகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் மாரி முன்னிலை வகித்தார். முன்னதாக  ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜேஷ் அனைவரையும் வரவேற்றார். அதில், அரசு சார்ந்த தீர்மானங்கள், ஊராட்சியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருதல், குழந்தைகள் வளர்ச்சி மற்றும் கல்வி சம்பந்தமான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், வருவாய் துறை அதிகாரிகள், சுகாதார பணியாளர்கள்  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி கிராமத்தில் உலக தண்ணீர் தின சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒன்றிய குழு பெருந்தலைவர் ஹேமலதாஞானசேகரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், வட்டாட்சியர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் அனைவரையும் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி கலந்து கொண்டார்.

கூட்டத்தில், கருவேப்பம்பூண்டி கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம், அனைத்து வீடுகளிலும் குடிநீர் வழங்குதலை உறுதிபடுத்துதல், அனைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளிலும் குளோரின் கலப்பான் கருவிகள் பொருத்தியதை உறுதிபடுத்துதல், கிராமம் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும், திறந்தவெளியில் மலம் கழிகாமல் இருப்பதை உறுதிப்படுத்துதல், கிராம மக்கள் வீடுகளில் வழங்கப்படும் கழிவுகளை தரம் பிரித்து வழங்குதல் மற்றும் அவற்றினை பாதுகாப்பான முறையில் மேம்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தனையடுத்து, கிராமத்தில் உள்ள ஏரியின் மதகுகள் சீரமைக்கப்படாமல் உள்ளதாகவும், கழிவு நீர்கால்வாய்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் கலெக்டர், சம்மந்தபட்ட அரசு துறை அலுவலர்களுக்கு, உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெரும்புதூர்: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, பெரும்புதூர் ஒன்றியம், தண்டலம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். துணை தலைவர் வேலாயுதம் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளர் மருதன் முன்னிலை வகித்தார். பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர். கூட்டத்தில், பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றபட்டன. வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கிராமசபை கூட்டம், போந்தூர் ஊராட்சி தலைவர் சரோஜா மணி, இருங்காட்டுகோட்டை சிவக்குமார், மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் வெங்கடேசன், பண்ருட்டி தலைவர் அர்ஜுனன், எறையூர் தலைவர் சசிரேகா சரவணன், குண்ணம் தலைவர் தமிழ் இலக்கியா பார்த்திபன், சிறுமாங்காடு தலைவர் சுபரஞ்சனி கன்னியப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இதில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஊராட்சி மன்ற தலைவர்கள் மண்ணிவாக்கம் கஜலட்சுமிசண்முகம், வண்டலூர் முத்தமிழ்செல்விவிஜயராஜ், ஊரப்பாக்கம் பவானிகார்த்தி, காரணைப்புதுச்சேரி நளினிஜெகன், நெடுங்குன்றம் வனிதாசீனிவாசன், வேங்கடமங்கலம் கல்யாணிரவி நல்லம்பாக்கம் லட்சுமணன், குமிழி ராஜேஸ்வரிகோதண்டபாணி, பெருமாள் பகவதிநாகராஜன், காயரம்பேடு ஜெயகாந்திபுஷ்பராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். துணை தலைவர்கள் முன்னிலை வகித்தனர் ஊராட்சி செயலர்கள் வரவேற்றனர்.

இந்த கூட்டத்தில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு வருகின்ற கோடைகாலத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஏரி, குளம், குட்டை ஆகியவற்றை தூர்வாரி மழைநீர் காலங்களில் தண்ணீரை சேமிக்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், ஒவ்வொரு ஊராட்சிகளிலும் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, வெங்கட்டராகவன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

திருப்போரூர்: உலக தண்ணீர் தினத்தையொட்டி, திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தண்ணீர் மற்றும் சுகாதார நெருக்கடியை தீர்க்க மாற்றத்தினை துரிதப்படுத்துதல் என்ற சிறப்பு கருப்பொருளினை முன்வைத்து, வான் தரும் மழை நீரினை சேகரித்தல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல், உடைந்த குழாய்களை சரிசெய்து நீர் வீணாகாமல் பாதுகாத்தல், மறு சுழற்சிக்கு உட்படுத்துதல், நிலத்தடி நீரை செறிவூட்டுதல், நீரின் தூய்மையை பாதுகாத்தல், நீர் மாசுபாட்டை தடுத்தல், மரம் வளர்த்தலை ஊக்குவித்தல், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி புனரமைத்தல், கால்வாய்களை தூர்வாரி புனரமைத்தல், நீரின் முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் எடுத்துக் கூறுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருப்போரூர் ஒன்றியம், கோவளம் ஊராட்சியில் தலைவர் சோபனா தங்கம் சுந்தர் தலைமையில் நடைபெற்ற இதற்கான சிறப்பு கிராமசபை கூட்டத்தில், ஒன்றியக்குழுத் தலைவர் எல்.இதயவர்மன், ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள் தேவி ஆகியோர் கலந்துக் கொண்டனர். சிறுசேரி ஊராட்சியில் தலைவர் தேவராஜன், துணை தலைவர் ஏகாம்பரம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா கலந்துக் கொண்டார். திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு அடுத்த மணப்பாக்கம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தையொட்டி நேற்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் கலந்து கொண்டு கிராம சபையை தொடங்கி வைத்தார். இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், ஜல் ஜிவன்திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குதல், நீர் நிலைகளை புனரமைத்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதி மொழியினை ஏற்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகலைசெல்வன்‌, ஹரிகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் உலக தண்ணீர்தின கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

Related Stories: