5 ஆண்டுகளாக தொடர்ந்து நடக்கும் பணிகள் நெல்லை சந்திப்பு பஸ்நிலையம் எப்போது திறக்கப்படும்? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நெல்லை,  மார்ச் 23: நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் தொடர்ந்து பணிகள் நடந்து வரும் நிலையில், பஸ் நிலையம் விரைந்து திறக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஒன்றிய அரசின் நகர்புற வளர்ச்சி, வீட்டுவசதி வளர்ச்சி துறையின் மூலம் 2016ல் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி ஒன்றிய அரசு 50%, மாநில அரசு 50% என்ற விகிதத்தில் நெல்லை மாநகராட்சிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டு ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டது. அதை தொடர்ந்து சரியான திட்டமிடல் இன்றி கட்டப்பட்ட பாளை பஸ் நிலையமும் திறக்கப்பட்டது. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் முதன்மையாக பணிகள் தொடங்கப்பட்ட நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் இன்று வரை திறப்பு விழா காணாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை சந்திப்பு பெரியார் பஸ் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் கடந்த 2018ம் ஆண்டு ரூ.78.51 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடங்கின. 4.75 ஏக்கரில் செயல்பட்ட இப்பஸ்நிலையத்தில் நவீன வசதிகளை உருவாக்குகிறோம் என்ற போர்வையில் குவிந்து கிடந்த ஆற்றுமணலும், தாதுமணலும் லாரி, லாரியாய் வெளியே கொண்டு செல்லப்பட்டது. பஸ் நிலைய மணல் விற்பனையில் கோடிக்கணக்கில் மோசடி நடந்ததாக கூறி ஐகோர்ட்டில் வழக்குகளும் தொடரப்பட்டன.

இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக பஸ்நிலைய வளாகத்தில் பணிகளும் விறுவிறுப்பாக நடந்தேறின. பஸ்களை நிறுத்த வசதியாக தரைதளம், பூமிக்கு அடியில் கார், பைக் நிறுத்துவதற்கு வசதியாக கீழ்தளம், பஸ்நிலையத்தை சுற்றிலும் கடைகள் செயல்பட வசதியாக 3 தளங்கள் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு, பஸ் நிலையம் தற்போது பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் கடந்தாண்டு இறுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ள மணல் அனைத்தும் கோர்ட் கமிஷனர் முன்னிலையில் முறைப்படி அள்ளப்பட்டு, ராமையன்பட்டி குப்பை கிடங்கு பகுதியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

மணல் அள்ளப்பட்ட பகுதியில் தற்போது பூங்கா அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ரயில்நிலையத்தில் இருந்து வருவோர் சந்திப்பு பஸ்நிலையத்திற்குள் வருவதற்கு சப்வே அமைக்கும் பணிகளும் விரைவில் நடக்க வாய்ப்புகள் உள்ளன.இந்நிலையில் பஸ் நிலையத்தில் 80% பணிகள் நிறைவு பெற்றுவிட்ட நிலையில், பஸ்நிலையம் திறப்பு விழாவுக்கும் தயாராகவே உள்ளது. ஏனெனில் பஸ்கள் நிறுத்தும் இடம், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், பார்க்கிங் வசதிகள் முழுமையாக செய்து முடிக்கப்பட்டுவிட்டன. எனவே பஸ் நிலையத்தை திறக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், கோர்ட்டில் உள்ள வழக்குகளால் திறப்பு விழா தள்ளிப் போவதாக தெரிகிறது. இதனால் பொதுமக்களும், பயணிகளும் மனம் நொந்த நிலையில் உள்ளனர்.

18 மாதங்களில்  முடிக்கப்பட வேண்டிய பணிகள், இப்போது 5 ஆண்டுகளை தொட்டுக் கொண்டுள்ளது. நெல்லை மாநகரின் பிரதான பஸ் நிலையமாக காணப்படும் வண்ணார்பேட்டை பகுதியில் உள்ளூர் பஸ்களும், வெளியூர் பஸ்களும், ஆம்னி பஸ்களும் குவிந்து போக்குவரத்து நெருக்கடியை உருவாக்கி வருகின்றன. நெல்லை சந்திப்பு பஸ்நிலையம் திறந்தால் மட்டுமே போக்குவரத்து நெருக்கடி குறைவதற்கு வாய்ப்புகள் உள்ள நிலையில், அதற்கான முயற்சிகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Related Stories: