×

கிராமசபை கூட்டத்தில் கோரிக்கை வைத்தால் நிறைவேறும் என்ற நம்பிக்கை காப்பாற்றப்படும் கலெக்டர் செந்தில்ராஜ் பேச்சு

உடன்குடி, மார்ச் 23: கிராமசபை கூட்டத்தில் கோரிக்கை வைத்தால் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை காப்பாற்றப்படும் என்று நயினார்பத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசினார். உடன்குடி யூனியன் நயினார்பத்து பஞ். அம்மன்புரத்தில் உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். திருச்செந்தூர் ஆர்டிஓ புஹாரி, வேளாண் இணை இயக்குநர் பழனி வேலாயுதம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் லோகநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மார்டின்ராணி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், யூனியன் சேர்மன் பாலசிங், பிடிஓக்கள் பழனிசாமி, ஜான்சிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ். தலைவர் அமுதவல்லி வரவேற்றார்.

கலெக்டர் செந்தில்ராஜ் பேசியதாவது: ‘உலக தண்ணீர் தினத்தையொட்டி பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடத்தி நீராதாரங்களை வலுப்படுத்துவதற்கும், தண்ணீரின் சிறப்பை எடுத்து சொல்வதற்கும், தண்ணீர் வீணாவதை தடுப்பதற்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 2023ம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக அனுசரிக்கப்படுவதையொட்டி சிறுதானியத்தின் பயன்கள் குறித்தும் கிராம சபைக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு சிறுதானியம் பயிரிட தேவையான வேளாண் இடுபொருட்களை வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம். வழக்கமாக ஆண்டுக்கு 4 முறைதான் கிராமசபை கூட்டம் நடந்து வந்தது. ஆனால் முதலமைச்சர் ஊரக வளர்ச்சி துறை மூலம் ஆண்டுக்கு 6 கிராமசபை கூட்டம் நடத்துவதற்கு உத்தரவிட்டதையடுத்து தற்போது தண்ணீர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது.

இங்குள்ள பள்ளி கட்டிடம், மகளிர் திட்ட கட்டிடத்தில் இயங்கி வருவதால் புதிய கட்டிடப் பணிகளை மே 31க்குள் முடித்தால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நயினார்பத்து பஞ்சாயத்தில் உள்ள நயினார்பத்து, இனாம்நயினார்பத்து, தைக்காவூர், அம்மன்புரம் உள்ளிட்ட 5 குக்கிராமங்களுக்கு ஒரே ரேஷன் கடை இருப்பதால் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் சிரமப்படுவதாக தெரிவித்தனர். கூட்டுறவுத்துறை சார்பில் வாகனங்கள் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். திருட்டு சம்பவங்களை தடுப்பதற்கு மாவட்ட கலெக்டரின் விருப்ப நிதியிலிருந்து 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

இங்குள்ள 37 குடும்பங்கள் கோயில் நிலத்தில் வீடு கட்டி குடியிருப்பதால் பட்டா வழங்க இயலவில்லை. தமிழ்நாடு முழுவதும் கோயில் நிலத்தில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக  உயர்நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வீடுகளுக்கு பட்டா இல்லாததால் மின் இணைப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளது. மின் வசதியின்றி படிப்பு பாதிக்கப்படுவதாக குழந்தைகளே நேரடியாக வந்து தெரிவித்தனர். மின்விசிறி, மின்விளக்கு ஆகியவை இயங்கும் வகையில் சோலார் இணைப்பு வசதிகள் இன்னும் 3 நாட்களில் செய்து தரப்படும். பட்டா பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கைகளை தெரிவித்தால் தீர்வு கிடைக்கும் என்ற உங்களது நம்பிக்கை காப்பாற்றப்படும், என்றார். கூட்டத்தில்  பஞ். துணை தலைவி ராஜகுமாரி, மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,Senthilraj ,Gram Sabha ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...