×

தஞ்சாவூரில் புகழ்பெற்று விளங்கும் ராஜாஜி பூங்காவில் கட்டணத்தை குறைக்க வேண்டும்

தஞ்சாவூர்: புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் தஞ்சாவூரில் அமைந்துள்ள ராஜாஜி பூங்காவை பார்க்க கட்டணம் அதிகளவு இருப்பதால் மாணவ, மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குறைவான சிறப்பு சலுகை கட்டணம் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் செயல்பட்டு வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது அருங்காட்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அதிகரிப்பு, கிராம மக்கள் அதிகம் வருகை இடம் பற்றாக்குறை போன்ற காரணத்தால் தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கடந்த 2015ம் ஆண்டு கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் பழைய கலெக்டர் அலுவலக கட்டடத்தை பாதுகாத்து, அருங்காட்சியகமாக மாற்ற நிர்வாகம் முடிவு செய்தது. தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 8.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. மாவட்டத்தின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால உலோக சிற்ப காட்சியகம், கற்சிற்ப காட்சியகம், ‘7டி’ திரையரங்கம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலாப்பயணிகள் பார்த்து மகிழ 20 நாடுகளை சேர்ந்த 300- க்கும் அதிகமான அரிய வகை பறவைகள் நிறைந்த இராஜாஜிபறவை பூங்கா பழைய கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறவைகள் பூங்காவில் பறவைகளுக்கான உணவை கையில் வைத்து காத்திருந்தால் அதை உண்பதற்கு பறவைகள் வந்து நம் கைகளிலேயே நின்று உணவை கொஞ்சம் கொஞ்சமாக தின்பது அனைவரையும் கவர்ந்து வருகிறது. குழந்தைகளுக்கு இது மிகப்பெரிய மகிழ்ச்சி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. அருங்காட்சியகத்தை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.20, சிறுவர்களுக்கு ரூ.10, 7டி திரையரங்கத்திற்கு ரூ.75, பறவைகள் பூங்காவிற்கு ரூ.150 , மேலும் 3 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு டிக்கெட் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை விட உள்ள நிலையில் தஞ்சை மாவட்டம் உட்பட பக்கத்து மாவட்டங்களில் இருந்து தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளை சுற்றுலாவாக அழைத்து வருகின்றனர். அவ்வாறு வரும் போது இந்த ராஜாஜிப் பூங்காவிற்கு மாணவ, மாணவிகள் செல்ல முடியாத அளவிற்கு கட்டணம் கூடுதலாக உள்ளது. இதனால் பறவைகளை பார்த்து மகிழலாம் என்ற வருபவர்கள் மனம் நொந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். மேலும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டால் சுற்றுலாவாக வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் வருபவர்களும் பார்த்து மகிழும் வகையில் அருங்காட்சியகத்தில் உள்ள கட்டணங்களை குறைத்து சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Rajaji Park ,Thanjavur ,
× RELATED வாக்கு பதிவான இயந்திரங்கள் பூட்டி...