×

4200 போக்குவரத்து ஊழியர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்

நாகர்கோவில்,  மார்ச் 23:   குமரியில்  ஒரே நாளில் இரு இளம் வயது நடத்துநர்கள் பலியானதை  அடுத்து 4,200 போக்குவரத்து கழக  ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நாளை முதல் இலவச பொது மருத்துவ  முகாம் நடத்தப்படுகிறது.
 நவீன உலகில்  பழக்கவழக்கங்கள், வாழ்க்கை  முறைகள், பணியில் மனஅழுத்தம் காரணமாக இளவயதிலேயே சர்க்கரை குறைபாடு,  ரத்தஅழுத்தம் காரணமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட்டு உயிர்  இழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்க தமிழக அரசு  அரசு மருத்துவமனைகளில் தொற்றா நோய் பிரிவு தொடங்கியுள்ளதுடன், தற்போது  இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.

இதன்படி  வீடு தேடிசென்று காய்ச்சல் மட்டுமின்றி ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்  பரிசோதனை உள்பட தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டு, மாத்திரைகள்  வழங்கப்பட்டு வருகின்றன. தேவைப்படுவோரை மருத்துவமனையில் அனுமதித்து  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  தமிழ்நாடு அரசு  போக்குவரத்து கழக  நாகர்கோவில் மண்டலத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் சுரேஷ்  மற்றும் சந்திரசேகர் என்ற இரு நடத்துநர்கள் திடீரென இறந்தனர். இருவருமே  47 வயதிற்கு உட்பட்டவர்கள். திடகாத்திரமானவர்கள். இதில் சுரேஷ் நெல்லை  செல்லும் அரசு பஸ்சில் பணியில் இருந்தபோது நான்குநேரி சுங்கச்சாவடி அருகே  பஸ் செல்லும் போது மாரடைப்பால் இறந்தார். சந்திரசேகர்  காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

ஒரே நாளில்  இருவர் மரணமடைந்ததை அடுத்து, நாகர்கோவில்  போக்குவரத்து கழக  மண்டலத்தில் பணியாற்றும் 4,200 ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு சர்க்கரை குறைபாடு மற்றும் இதய நோய்கள் இருக்கிறதா  என்பதனை கண்டறியும் பொருட்டு அனைவருக்கும் இலவச பொதுமருத்துவ முகாம்களை  பணிமனை வாரியாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி,  நாகர்கோவில் மண்டல போக்குவரத்து கழகம், ரோட்டரி கிளப் மற்றும் தனியார் கண்  மருத்துவமனை ஆகியன இணைந்து மருத்துவ முகாம்களை நடத்துகின்றன.  ராணித்தோட்டம் 1, 2 மற்றும் 3 ஆகிய பணி மனைகளில் நாளையும்  (24ம்  தேதி), செட்டிக்குளம்  பணிமனையில் 25ம் தேதியும், 27ம் தேதி  கன்னியாகுமரி மற்றும் விவேகானந்தபுரம் பணிமனைகளிலும், 28ம் தேதி குளச்சல்  பணிமனையிலும், 29ம் தேதி திங்கள்நகர் பணிமனையிலும் பொது மருத்துவ முகாம்கள்  நடைபெற உள்ளன.

Tags :
× RELATED திருச்சி தேசிய கல்லூரியில் பொருளியல்துறையில் துவக்க நிகழ்ச்சி