நாடாளுமன்ற கட்டிட பின்னணியில் முதலமைச்சர் கட்அவுட் முன் போட்டோ எடுக்கும் மக்கள் உடனுக்குடன் வழங்கப்படும் பிரிண்ட்

மதுரை: நாடாளுமன்ற பின்னணியில் நிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்அவுட் உடன் போட்டோ எடுத்துக் கொள்ள பெண்கள் உள்ளிட்ட பலரிடமும் ஆர்வம் நிலவி வருகிறது. எடுத்த போட்டோ பிரிண்ட் உடனுக்குடன் அளிக்கப்படுவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, எம்எல்ஏ கோ.தளபதி, மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் மதுரை ஊமச்சிகுளம் மேனேந்தல் திடலில் மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் இணைந்து ‘‘மக்கள் பயணத்தில் மாண்புமிகு முதலமைச்சர்’’ என்ற தலைப்பில் பிரமாண்டமாக தமிழ்நாடு முதலமைச்சர் திமுக பேரியக்கத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் 70ஆண்டுகால வாழ்க்கை பயணம் குறித்த புகைப்பட கண்காட்சி மார்ச் 19 முதல் துவங்கி நடந்து வருகிறது.

நடிகர் வடிவேலு இக்கண்காட்சியை பார்த்து பிரமிப்பாக இருக்கிறது என்றார். மேலும் இக்கண்காட்சியில் 70 ஆண்டு கால பொதுவாழ்க்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் போராட்டங்கள், சந்தித்த துயரங்கள், படிப்படியாக தன்னைத்தானே மெருகேற்றி மக்கள் தலைவராக உருவான எழுச்சிமிகு பயணத்தை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் முதலமைச்சரின் பல அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இக்கண்காட்சியை தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்த்து வருகின்றனர். இக்கண்காட்சியை பார்த்து விட்டு வெளியில் வரும் பெண்கள், அங்கு நாடாளுமன்றம் பின்னணியில் இருக்க, முன்னால் நின்றுகொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்அவுட்டை நோக்கி வருகின்றனர்.

அங்கு முதலமைச்சருடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்வதில் அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்படி அவர்கள் அனைவரும் மிக பொறுமையாக வரிசையில் காத்திருந்து ஒவ்வொருவராக முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். போட்டோ எடுத்ததும் உடனுக்குடன் அதனை அந்த இடத்திலேயே பிரிண்ட் போட்டு அவர்களிடம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: