சிதம்பரம் பகுதியில் கஞ்சா விற்ற வெளிநாட்டு வாலிபர் அதிரடி கைது

சிதம்பரம், மார்ச் 22: சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சித்தலபாடி டாஸ்மாக் கடை அருகே  சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் ரவாண்டா நாட்டை சேர்ந்த கிகாலி கிமிஹுராரா பகுதியை சேர்ந்த கட்டோரா மகன் கட்டோரா ஏமி டி ஜிஹோவா(29) என தெரிய வந்தது. இவர் இந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது.

இவர் தற்போது புதுச்சேரி ஆரோவில்லில் தங்கி இருந்து சிதம்பரம் பகுதியில் வந்து கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது இதையடுத்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த 80 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இவர் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முன்னாள் மாணவர் என கூறப்படுகிறது. இவரது பாஸ்போர்ட் மற்றும் விசா நகலை வாங்கி விசாரணை செய்ததில், இவரிடம் இந்திய நாட்டில் வசிக்கும் உரிமம் இல்லை என தெரிய வந்தது, இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: