×

அன்புஜோதி ஆசிரமத்தில் மனித உரிமை மீறலா? விழுப்புரத்தில் சிபிசிஐடி போலீசாரிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

விழுப்புரம், மார்ச் 22: விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரம வழக்கு தொடர்பாக  சிகிச்சை பெற்று வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தி தேசிய மனித உரிமைகள் ஆணையம்
வாக்குமூலம் பெற்றது. கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின்பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூரில் அன்புஜோதி என்ற ஆசிரமத்தை துவங்கி நடத்தி வந்தார்.
ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, பலர் மாயமாகிப் போனதாக எழுந்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார், வழக்கு பதிவு செய்து ஆசிரமம் நிர்வாகி ஜூபின் பேபி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.  தேசிய குழந்தைகள் நல ஆணையம்,

தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை துவக்கி உள்ளது. அதன்படி, ஆசிரமத்தினரால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தேசிய மனித உரிமை ஆணையக் குழுவினர்  நேரில் நேற்று சென்று விசாரணை நடத்தினர்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு முதுநிலை கண்காணிப்பாளர் பாட்டீல் கேத்தன் பாலிராம் தலைமையில்,  துணைக் கண்காணிப்பாளர் மோனியா உப்தல், ஆய்வாளர் சந்தோஷ்குமார், பிஜூ, ஏக்தா பாதுஷா உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தினர். இந்த குழுவினர் நேற்று அன்பு ஜோதி ஆசிரமத்தினரால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம்  நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் சிபிசிஐடி
கூடுதல் எஸ்பி கோமதி மற்றும் அதிகாரிகளிடம் வழக்கு தொடர்பாக விவரங்களை கேட்டறிந்தனர். 3 மணி நேரமாக நடந்த விசாரணையில் தெரிவித்த தகவல்களை தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதிவு செய்து கொண்டது. மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் மாற்றுத்திறனாளி அலுவலர், வருவாய்துறை அதிகாரிகளிடம் இன்றும், நாளையும் விசாரணை நடத்த உள்ளனர். மேலும் ஆசிரமத்தை சுற்றி வசிக்கும் பொது மக்களிடமும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி 24 ம் தேதி நிறைவு செய்கிறது. இறுதியாக விசாரணை அறிக்கையை ஒன்றிய அமைச்சகத்திடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அளிக்க உள்ளனர்.

Tags : Anbujothi Ashram ,National Human Rights Commission ,CBCID ,Villupuram ,
× RELATED பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன்...