×

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனரை பொதுமக்கள் முற்றுகை - வாக்குவாதம்

திருப்பூர்:   திருப்பூர் திருமுருகன் பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட வெற்றிவேல் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கூறி அப்பகுதி பொதுமக்கள் நேற்று நகராட்சி கமிஷனரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  திருப்பூர் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட வெற்றிவேல் நகரில் சுமார் 350 க்கும் மேற்பட்ட குடியிருப்பில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு அருகாமையில் தற்போது புதிதாய் நகராட்சி அலுவலக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைந்த வெற்றிவேல் நகரில் தற்போது வரை எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை. குறிப்பாக அப்பகுதியில் தற்போது வரை சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் தொற்றுநோய் போன்றவை ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் சாலை வசதி, குடிநீர் இணைப்பு, பொது தண்ணீர் குழாய், மேல் நிலை தண்ணீர் தொட்டி போன்ற வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நகராட்சியில் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து, நகராட்சி கமிஷனரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுருகன் பூண்டி நகராட்சி தலைவர் குமார், திருமுருகன்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Tirumuruganpoondi ,Municipal Commissioner ,
× RELATED நீலகிரி தொகுதியில் மீண்டும்...