மாம்பழ சீசன் துவங்குவதால் பழநியில் பழச்சாறு தொழிற்சாலை வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

பழநி: பழநி பகுதியில் மா சீசன் துவங்க உள்ள நிலையில் பழச்சாறு தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி அருகே ஆயக்குடி, வரதாபட்டிணம், சட்டப்பாறை பகுதிகளில் தோட்டக்கலை பயிர்கள் அதிகளவு பயிரிடப்படுகின்றன. இங்கு விளைவிக்கப்படும் மா, கொய்யா, சப்போட்டா போன்றவை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் அதிகளவு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஆயக்குடி பகுதியில் மா சீசன் துவங்கி விடும். இங்கு விளைவிக்கப்படும் மா வகைகள் பழச்சாறு தயாரிப்பதற்காக கிருஷ்ணகிரி பகுதிகளுக்கு அதிகளவு கொண்டு செல்லப்படுகிறது. தவிர, கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இடைத்தரகர் கமிஷன், போக்குவரத்து செலவினம் போன்றவைகளை கணக்கிடும்போது விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைப்பதில்லை. எனவே, பழநி பகுதியிலேயே பழச்சாறு தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆயக்குடி விவசாயி சின்னத்துரை கூறியதாவது, பழநி அருகே ஆயக்குடி பகுதியில் 3 ஆயிரம் ஏக்கரில் மல்கோவா, நீலம், கல்லாமை, காதர், பங்கனவள்ளி, செந்தூரா மா வகைகள் அதிகளவு விளைவிக்கப்படுகின்றன. இதில் கல்லாமை போன்றவை ஜூஸ் தயாரிப்பதற்காக கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பழநி பகுதியில் பழச்சாறு தொழிற்சாலை அமைத்தால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். திமுக ஆட்சிகாலத்தில் உறுதியாக இத்திட்டம் நடைபெறுமென நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: