×

சிக்கண்ணா அரசு கல்லூரியில் உலக சிட்டுக்குருவிகள் தின கருத்தரங்கு

திருப்பூர், மார்ச் 21: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பில், உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு, உறுதிமொழி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். பறவை ஆர்வலர் கீதாமணி, கார்த்திகையன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் இயற்கை கழக பிரதிநிதி ராம்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:

அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை காக்க உலகம் முழுவதும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. டெல்லி அரசு சிட்டுக்குருவியை தங்களது மாநில பறவையாக அறிவித்துள்ளது, உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் ஒரு சிறிய பறவை இது. கோடை காலங்களில் பறவைகளுக்கு தினமும் தண்ணீர் வைக்க வேண்டும். குருவிகளுக்கு தண்ணீர் வைப்பது பெருமையல்ல, அது நம்முடைய கடமை. மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழும். ஆனால் பறவைகள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதற்காக செயற்கை முறையில் கூட்டை எப்படி உருவாக்க வேண்டும், அதன் அளவுகளை எவ்வாறு கணக்கீடு செய்யவேண்டும் என விளக்கம் அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாணவ செயலர்கள் சுந்தரம், பூபதி ராஜா, ரமேஷ், மதுகார்த்திக் ஆகியோர் தலைமையில் 55க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 மாணவ-மாணவிகள் சிட்டுக்குருவிகளை பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags : World Sparrow Day Seminar ,Chikkanna Government College ,
× RELATED சிக்கண்ணா அரசு கல்லூரி சார்பில்...