தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை உள்ளடக்கிய பட்ஜெட்

கோவை, மார்ச் 21: கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் பொற்கால ஆட்சிக்கான மற்றொரு மணி மகுடமாக  2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அமைந்துள்ளது. முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தலைநிமிர்ந்து நடைபோட வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் இப்பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.  

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000  உதவித்தொகை, கோவையில்  9000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம், கோவையில் செம்மொழி பூங்கா, சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சியில் முக்கிய பொது இடங்களில் இலவச வைபை சேவை, விருதுநகர்,  வேலூர், கள்ளக்குறிச்சி, கோவையில் சிப்காட்  பூங்காக்கள், சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை வரை நான்கு வழி மேம்பாலம், மதுரையின்  மையப்பகுதியில் நிலத்துக்கடியில் 8 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் பாதை, சென்னை பூந்தமல்லி- கோடம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில், மகளிர் சுய உதவி குழுவுக்கு 30,000 கோடி கடன் வழங்க இலக்கு, தெரு நாய்களுக்கான இனவிருத்தி கட்டுப்பாட்டு மையம்,

ஈரோடு  மாவட்டம் அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வனப்பகுதியில் தந்தை பெரியார்  வனவிலங்கு சரணாலயம், கடல் அரிப்பை தடுக்க தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம், மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் மையம், அதிநவீன விளையாட்டு நகரம், அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம், மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதி திராவிட மாணவர்களுக்காக 100 கோடியில் விடுதிகள், முதன்மை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு 25 ஆயிரம் உதவித்தொகை, ஸ்டான்லி மருத்துவமனையில் புதிய பன்னோக்கு சிகிச்சை மையம், செவிலியர் விடுதி, அனைத்து மாவட்டங்களிலும் வரும் ஆண்டிலும் புத்தக கண்காட்சி, தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

சமூக பாதுகாப்பு,  கல்வி மூலம் பெண்கள் மேம்பாடு, வறுமை ஒழிப்பு,   அடிப்படை கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி, ஏழைகளின் நலன்,  இளைஞர்களின் வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மாநிலமும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழக முதல்வரின் சிந்தனையிலும், செயலிலும் சுயமரியாதை, சமூகநீதி, சமூக நல்லிணக்கம் மற்றும் அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய திராவிட கொள்கைகள் நிறைந்திருக்கின்றன.

முன்னுரிமை அளிக்கவேண்டிய துறைகளுக்கும், திட்டங்களுக்கும் போதிய நிதி வழங்கி, வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் சமூகத்தின் அனைத்து பிரிவினரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான முழுமையான திட்டங்களை உள்ளடக்கிய பட்ஜெட்டாக வடித்தெடுத்து கொடுத்த தமிழ்நாடு முதல்வருக்கு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பிலும், பொதுமக்களின் சார்பிலும்  மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: