×

திருத்தணியில் மழை மரங்கள் சாய்ந்ததால் திணறும் மின்வாரிய ஊழியர்கள்

திருத்தணி: திருத்தணியில் பலத்த சூறாவளி காற்றுடன் நேற்று மழை  பெய்தது. இதனால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. அவற்றை சீர்செய்வதற்கு மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். ஆனாலும் அவற்றை அப்புறப்படுத்துவதற்கு மின்வாரிய ஊழியர்கள் திணறி வருகின்றனர். திருத்தணி மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்டது திருத்தணி வடக்கு மின்வாரிய அலுவலகத்துக்குட்பட்ட முருகம்பட்டு, பொன் பாடி, மத்தூர், சிங்கராஜபுரம், கொத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது, இந்த மின்சாரத்தை பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கும் விவசாயத்திற்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் மரங்கள் வேரோடு மின்கம்பங்கள் மீது சாய்ந்து விட்டது.

சுமார் 30க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்து விட்டதால் அப்பகுதிகளுக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்த மின்தடையை சீரமைக்க திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் பாரி ராஜ், உதவி  செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் ராஜாராம் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்கள் மீது சாய்ந்துள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தி வருகின்றனர். போதிய ஊழியர்கள் இல்லாத காரணத்தால் மரங்கள் அகற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகளுக்கு மின்விநியோகம் சீரமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். கூடுதல் பணியாளர்களை மின்வாரியத்தில் நியமித்து அடிக்கடி மின்தடை ஏற்படுவதை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tiruthani ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...