×

உலக தலைக்காய தினம், ஹெல்மெட் அணிவதன் அவசியம் நெல்லையில் விழிப்புணர்வு பைக் பேரணி

நெல்லை, மார்ச் 21: உலக தலைக்காய தினத்தை முன்னிட்டு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து நெல்லையில் நடந்த விழிப்புணர்வு பைக் பேரணிகளில் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
உலக தலைக்காய தினத்தை முன்னிட்டு நெல்லை  மாநகர காவல்துறை, கோபாலசமுத்திரம் கிராம உதயம், பாளை சேவியர்  கல்லூரி சமூக பணித்துறை மாணவர்கள் சார்பில் ெஹல்மெட் அணிவதன் அவசியம்  குறித்த பைக் பேரணி, மரக்கன்றுகள், துணிப்பைகள் வழங்குதல் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நெல்லையில் நடந்தன.

 பாளை பஸ் நிலையம் அருகே நடந்த இந்நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகித்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன்,  இருசக்கர வாகன பேரணியை துவக்கி வைத்தார். கிராம உதயம் இயக்குநர் சுந்தரேசன்  முன்னிலை வகித்தார். தன்னார்வ தொண்டர் முருகன்  வரவேற்றார்.  இதில் ஆர்வத்துடன் பங்கேற்ற பாளை சேவியர் கல்லூரி மாணவர்கள் ெஹல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மாநகரின் முக்கிய இடங்கள் வழியாகச் சென்று ெபாதுமக்கள்  மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் பங்கேற்ற வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினருக்கும் துணிப்பைகளில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதே போல் உலக தலைக்காய தினத்தையொட்டி நெல்லை சந்திப்பு ஷிபா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பைக் பேரணி ெநல்லையில் நடந்தது. நெல்லை கொக்கிரகுளம் அறிவியல் மையம் அருகே துவங்கிய இப்பேரணிக்கு ஷிபா மருத்துவமனை இயக்குநர் முகமது அராபத் தலைமை வகித்தார். டாக்டர் சுப்பிரமணியன், முகமது இப்ராகிம் முன்னிலை வகித்தனர். பேரணியை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து கொடியசைத்துத் துவக்கிவைத்தார். அப்போது அவர் பேசுகையில் ‘‘சிறிய விபத்து என்றாலும் தலையில் காயம் ஏற்பட்டால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. நெல்லையை 100% விபத்தில்லா மாநகராக மாற்ற முயற்சிகள் மேற்கொள்கிறோம். இதற்கு வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார்.

இந்த விழிப்புணர்வு பைக் பேரணியானது வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, சமாதானபுரம், பாளை ஹைகிரவுண்ட் வழியாக முஸ்லிம் அனாதை நிலையத்தில் நிறைவடைந்தது. தலையில் ஹெல்மெட் அணிந்தவண்ணம் பேரணியில் திரளாகப் பங்கேற்றோர், இதுதொடர்பான பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதைத்தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் ஷிபா மருத்துவமனை ஊழியர்கள், பாளை. சதக்கத்துல்லா கல்லூரி மாணவர்கள், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் தலைக் காயத்திற்கான முதலுதவி சிகிச்சை குறித்து டாக்டர் ஷியாவுல்லா விளக்கினார். உலக தலைக்காய தின சிறப்பு செய்தியை டாக்டர்கள் ராஜேஷ், அழகேசன் வழங்கினர். நிகழ்ச்சியில் செய்யது அகமது கபீர் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

Tags : World Head Injury Day ,Paddy ,
× RELATED சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்!:...