×

(தி.மலை) மீன்பிடி குத்தகை வழங்க கோரி மலைவாழ் மக்கள் சாலை மறியல் போலீசார் சமசரம் செங்கம் அருகே குப்பநத்தம் அணையில்

செங்கம், மார்ச் 21: செங்கம் அடுத்த குப்பநத்தம் அணையில் மீன் பிடிக்க குத்தகை வழங்கிட கோரி மலைவாழ் மக்கள் 100க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கம் அடுத்த குப்பநத்தம் அணையை கடந்த 2010ம் ஆண்டு அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். குப்பநத்தம் அணைக்கு இடத்தினை கல்லாத்தூர், கிளையூர், துறிஞ்சிகுப்பம் உள்ளிட்ட 3 கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் வழங்கினர். மேலும், அணை கட்ட நிலம் வழங்கிய மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்பட்டது.

இந்நிலையில், அணையில் உள்ள மீன் குத்தகையை 3 கிராம மக்களுக்கு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், தற்பொது சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த நபர்கள் குப்பநத்தம் அணையை குத்தகைக்கு எடுத்து அதன் மூலம் வருவாய் ஈட்டிவந்ததாக கூறப்படுகிறது. தற்போது குத்தகை காலம் முடிந்து மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மலை கிராம மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் எங்களுக்கு மீன் குத்தகை மகளிர் சுய உதவி குழு மூலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அரசு பஸ்சை சிறைபிடித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டு, அங்கிருந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால், சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மீன் குத்தகைதாரர் அணையின் அருகே அமைக்கப்பட்ட குடிசை தீ பிடித்து எரிந்து சாம்பலானது. இதுகுறித்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : D.Malai ,Kuppanantham dam ,Samasaram Sengam ,
× RELATED தி.மலை மாவட்டம் செங்கம் அருகே தேசிய...