×

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

துரைப்பாக்கம்: திருவான்மியூர் திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை மருந்தீஸ்வரர் கோயிலில் வருடம்தோறும் பங்குனி திருவிழா 11 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி வரும் 25ம் தேதி இரவு ஊர்க்காவல் எல்லை தெய்வமான ஸ்ரீ செல்லியம்மன் வீதி உலாவும், 26ம் தேதி இரவு ஸ்ரீ விநாயகர் வீதி உலாவும் நடக்கிறது. 27ம் தேதி இரவு 9 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் கொடியேற்றம், யாகசால பூஜை, பஞ்சமூர்த்தி வீதி உலா நடக்கிறது.  28ம் தேதி காலை 9 மணிக்கு சந்திரசேகரர் சூரிய பிரபையில் காமதேனுக்கு காட்சியருளல், தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு சந்திரபிரபையில் காட்சி அருளல் மற்றும் தியாகராஜர் வீதி உலா நடக்கிறது. 29ம் தேதி புதன்கிழமை காலை 6 மணிக்கு சந்திரசேகரர் அதிகார நந்தி வாகனத்தில் சூரியனுக்கு காட்சியருளல், இரவு 8.30 மணிக்கு பூத வாகனத்தில் சந்திரனுக்கு காட்சியருளல் மற்றும் தியாகராஜர் 3ம் திருப்பவனி பார்த்தசாரதிக்கு அருளல், 30ம் தேதி காலை 9 மணிக்கு பிருங்கி முனிவருக்கு காட்சி அருளல், இரவு 8.30 மணிக்கு நாக வாகனத்தில் காட்சியருளல் மற்றும் தியாகராஜர் 4ம் திருப்பவனி சந்திரனுக்கு அருளல், 31ம் தேதி காலை 9 மணிக்கு சந்திரசேகர் தொட்டித் திருவிழா, எமதர்மருக்கு அருளல் மற்றும் இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா, தியாகராஜர் 5ம் திருப்பவனி ராமபிரானுக்கு அருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

ஏப்ரல் 1ம் தேதி  காலை 9 மணிக்கு சந்திரசேகரர் இரட்சகவிற்கு அருளல், இரவு 8.30 மணிக்கு யானை வாகனத்தில் காட்சியருளல் மற்றும் ஸ்ரீ தியாகராஜர் 6ம் திருப்பவனி இந்திரனுக்கு அருளல், 2ம் தேதி காலை 6 மணிக்கு சந்திரசேகரர் தேர்த் திருவிழா நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு புஷ்ப விமானம் மற்றும் தியாகராஜர் வீதி உலா நடக்கிறது. 3ம் தேதி காலை 9 மணிக்கு சந்திரசேகரர் 4 மறைகளுக்கு அருளல், மாலை 6 மணிக்கு சந்திரசேகரர் பரிவேட்டை விழா மற்றும்  தியாகராஜர் வீதி உலாவும், 4ம் தேதி  பிற்பகல் 2 மணிக்கு கல்யாணசுந்தரர் திருக்கல்யாணம், மாலை 6.30 மணிக்கு அகத்தியருக்கு திருமணக் காட்சி அருளல் மற்றும் 10 மணிக்கு தியாகராஜர் வீதி உலாவும், 5ம் தேதி காலை 10 மணிக்கு சந்திரசேகரர் கடல் நீராடல் மற்றும் இரவு 9 மணிக்கு திருப்புரசுந்தரி தியாகராஜ சுவாமி திருமண விழாவும் நடக்கிறது.  அதனைத் தொடர்ந்து கொடியிறக்கம், வால்மீகி முனிவருக்கு 18 திருநடனக் காட்சி வீடுபேறு அளித்தல், பெருஞ்சிறப்பு விழா நடக்கிறது. கடைசி நாள் திருவிழாவாக 6ம் தேதி மாலை 6 மணிக்கு சந்திரசேகரர் தெப்பத் திருவிழாவும், இரவு 9 மணிக்கு வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதி உலாவும், அதனைத் தொடர்ந்து அதிகாலை 4.30 மணிக்கு தியாகராஜர் திருபுரசுந்தரி அம்மனுக்கு அருளல்,  பந்தம்பரி 18 திரு நடன பெருஞ்சிறப்பு விழாவும் நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி ஆலய வளாகத்தில் தினமும் மாலையில் ஆன்மிக சொற்பொழிவும் கர்நாடக இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.  இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ராஜாஇளம்பெருவழுதி மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


Tags : Bankuni festival ,Thiruvanmyur Varadiswarar Temple ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்