காதலனை மிரட்டுவதற்காக மதுபோதையில் 4வது மாடியிலிருந்து கீழே குதித்து பெண் தற்கொலை முயற்சி: துரைப்பாக்கம் கண்ணகி நகரில் பரபரப்பு

துரைப்பாக்கம்: துரைப்பாக்கத்தில் காதலனை மிரட்டுவதற்காக, மதுபோதையில் 4வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு, 2 கால்கள் மற்றும் இடுப்பு எலும்பு முறிந்தது. அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து கண்ணகிநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவல்லிக்கேணி, வாலாஜா சாலை, எல்லீஸ் சந்திப்பில் உள்ள தனியார் பாரில் இருந்து 2 நாட்களுக்கு முன், இரவு 12.10 மணியளவில் 6 இளம் பெண்கள் குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் வெளியில் வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு ஏதோ பேசிய நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளனார். மேலும், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளை மறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

தகவலறிந்த திருவல்லிக்கேணி போலீசார், அங்கு சென்று அவர்களை தடுத்து விசாரித்த போது 6 இளம்பெண்களும் சேர்ந்து, போலீசாரை தகாத வார்த்தையால் திட்டியவாறு, சாலையில் படுத்து பேருந்து மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் இடையூறு செய்துள்ளனர். இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு 6 இளம் பெண்களையும் காவல்துறை வாகனத்தில் ஏற்ற முயன்ற போது, 3 பெண்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பிடிபட்ட 3 பெண்களை மட்டும் வாகனத்தில் ஏற்றி, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர்.  அதில், மது அருந்தி இருப்பத தெரிந்தது. பின்னர் போலீசார் வாகனத்திலேயே விடியற்காலை 2.45 மணியளவில் அவர்களை வீட்டில் இறக்கி விட்டு நேற்று முன்தினம் விசாரணைக்கு வரும்படி கூறினர். அதன்படி காவல் நிலையத்துக்கு 3 பெண்கள் வந்தனர். விசாரணையில் இந்த இளம்பெண்கள் அனைவரும் சுப  நிகழ்ச்சிகளுக்கு உணவு பரிமாறும் வேலைக்கு செல்பவர்கள் எனவும், நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு மது அருந்தி விட்டு பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போதையில் ரகளை ஈடுபட்ட இளம்பெண்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இளம்பெண் ஒருவர் போதையில் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகள் சோனாலி (21). இவர் நேற்று முன்தினம் இரவு தனது காதலன் மணிகண்டனை சந்திக்க துரைப்பாக்கம் கண்ணகிநகர் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு தோழி சுதாராணி என்பவரின் வீட்டிற்கு சோனாலி மற்றும் அவரது காதலன் மணிகண்ணன் இருவரும் வந்துள்ளனர். அங்கு காதலர்கள் இருவரும் அளவுக்கதிகமாக மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சோனாலி தனது காதலனை மிரட்டுவதற்காக பீர் பாட்டிலை உடைத்து, தனது கழுத்தில் லேசாக கீறிக்கொண்டு, 4வது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவரது 2 கால்கள் மற்றும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு அலறி துடித்துள்ளார். அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து கண்ணகிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோனாலியை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து கண்ணகிநகர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: