×

தச்சமொழி டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும்

சாத்தான்குளம், மார்ச் 20: தச்சமொழியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்விடம் அப்பகுதி பெண்கள் மனு அளித்தனர். சாத்தான்குளம் பேரூராட்சி 15வார்டுக்குட்பட்ட தச்சமொழியில் முதலூர் சாலையில் கடந்த 20ஆண்டுகளுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடை மற்றும் பார் செயல்பட்டு வருகிறது. இந்த மது பான கடை எதிர்புறம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் குடியிருப்பு வீடுகள் அதிகமாக உள்ளன. டாஸ்மாக் கடை 12மணிக்கு திறக்கப்படுவதற்கு முன்பே மது பிரியர்கள் அங்கு காத்திருக்கின்றனர்.

அதற்கு முன்னதாக பிளாக்கில்  விற்கப்படும் மது பானத்தை அருந்தி வருகின்றனர். மது அருந்தியவர்கள் போதை தலைக்கு ஏறியதும் சிலர் தகராறில் ஈடுபடுவதும், குடியிருப்பு  வீட்டின் வாசலில் மட்டையாவதும் மது பாட்டில்களை உடைத்து தெருவில் வீசி செல்வதும் தொடர்ந்து அரங்கேறுகிறது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சமடையும் நிலை உருவாகிறது.
இந்நிலையில் சாத்தான்குளம் பகுதி அரசு விழாவில் பங்கேற்க வந்த ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏவிடம் தச்சமொழி பகுதி பெண்கள் திரண்டு வந்து மனு அளித்தனர். மனுவில், ‘தச்சமொழியில் உள்ள டாஸ்மாக் மது கடைக்கு வரும் மது பிரியர்களால் தொந்தரவு உள்ளது. அந்த கடையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

அல்லது போதையில் தொந்தரவு மற்றும் தகராறில் ஈடுப்படும் மது பிரியர்களை காவல்துறை மூலம் ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என முறையிட்டனர். மனுவை பெற்ற எம்எல்ஏ, உடன்  நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது நகரத் தலைவர் வேணுகோபால், மாவட்ட துணைத்தலைவர் சங்கர், ஒன்றிய கவுன்சிலர் சுதாகர், வட்டாரத்தலைவர்கள் சக்திவேல்முருகன், பார்த்தசாரதி, டாக்டர் ரமேஷ்பிரபு, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்ட பலர்  உடனிருந்தனர்.

Tags : Thachamozhi Tasmac ,
× RELATED கணிதத்துறை கருத்தரங்கம்