×

அய்யம்பாளையத்தில் அமர்க்களமாக நடந்த இரட்டை மாட்டு வண்டி போட்டி

பட்டிவீரன்பட்டி, மார்ச் 20: பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் ஊரக வளர்ச்சி  அமைச்சர் ஐ.பெரியசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தய போட்டி நேற்று நடைபெற்றது. பெரியமாடு, நடுமாடு, கரிச்சான்மாடு, பூஞ்சிட்டுமாடு, தேன்சிட்டுமாடு என 5 பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் திண்டுக்கல், தூத்துக்குடி, தேனி, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

பெரியமாடு பிரிவிற்கு முதல் பரிசாக ரூ.1.10 லட்சம், 2ம் பரிசாக ரூ.75 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.50, 4ம் பரிசாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டது. நடுமாடு பிரிவிற்கு முதல் பரிசாக ரூ.75 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.40 ஆயிரம், 4ம் பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. கரிச்சான் மாடு பிரிவில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.40 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.30 ஆயிரம், 4ம் பரிசாக ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது.

பூஞ்சிட்டு மாடு பிரிவில் முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.25 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.20 ஆயிரம், 4ம் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. தேன்சிட்டு மாடு பிரிவில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.20 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.15 ஆயிரம், 4ம் பரிசாக ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டது. முன்னதாக இப்போட்டியை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழநி எம்எல்ஏவுமான ஐ.பி.செந்தில்குமார் துவக்கி வைத்தார்.

இதில் திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி, ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பி.சி.முரளிதரன், பேரூராட்சி மன்ற தலைவர் ரேகா அய்யப்பன், நகர செயலாளர் தங்கராஜ், முன்னாள் நகர செயலாளர் அய்யப்பன், திமுக பிரதிநிதி சடையாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். இப்போட்டியினை அய்யம்பாளையம், கணேசபுரம், கதிர்நாயக்கன்பட்டி, நெல்லூர், சித்தரேவு ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று மகிழ்ச்சி ஆராவாரம் செய்து பார்த்து ரசித்தனர். பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டனர்.

Tags : Ayyampalayam ,
× RELATED பட்டிவீரன்பட்டி அருகே மருதாநதி வாய்க்கால் சீரமைப்பு