அய்யலூர், மார்ச் 20: திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, அய்யலூர், எரியோடு மற்றும் அதனை சுற்றியுள்ள மலை கிராமங்களில் தக்காளி அதிகளவு பயிரிடப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் தக்காளிகள், அய்யலூரில் செயல்பட்டு வரும் தக்காளிக்கான பிரத்யேக சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து சென்னை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் தக்காளிகளை மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தக்காளிக்கு நல்ல விலை கிடைத்து வந்தது.
இந்நிலையில் தற்போது ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் தக்காளியின் விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் அங்கிருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், அய்யலூர் சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இங்கு கடந்த வாரம் 14 கிலோ கொண்ட பெட்டி தக்காளி ரூ.300 முதல் ரூ.450 வரை விலை கிடைத்தது. ஆனால் தற்போது வெளிமாநில வரத்து அதிகரிப்பால் 14 கிலோ கொண்ட பெட்டி தக்காளி விலை ரூ.50 முதல் ரூ.130 வரை மட்டுமே விற்கப்படுகிறது.
அய்யலூர் சந்தைக்கு வியாபாரிகள் யாரும் வராததால், மார்க்கெட் உரிமையாளர்கள் தேங்கும் தக்காளிகளை சாலையில் கொட்டி வருகின்றனர். இது தக்காளி விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘தக்காளி விலை இதே நிலையில் இருந்தால் விவசாயிகளுக்கு பெரும் நட்டம் ஏற்படும்’ என்றனர்.
