×

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன்பெரியசாமி வீதி வீதியாக பொதுமக்களிடம் குறைகேட்பு

தூத்துக்குடி, மார்ச் 19:  தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன்பெரியசாமி வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களை உள்ளடக்கிய ஆய்வுக்கூட்டங்களை நடத்தி பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வெறும் காகிதமாக எண்ணாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் ஆவணமாக கருதி அதிகாரிகள் துரிதமாக செயல்படவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இந்தவகையில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து மக்களின் குறைகளையும் தீர்த்திட ஏதுவாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கடந்த இருதினங்களாக பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

இந்தவகையில், மாநகராட்சியின் 23வது வார்டு பனைவெல்லம் சங்கம் பகுதிக்கு அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை மனுவாக பெற்றார்.
அதன்பின்னர் முத்துகிருஷ்ணாபுரம், பூபால்ராயர்புரம் ஆகிய பகுதிகளிலும் அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி மற்றும் தமது குழுவினருடன் நடந்தே சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றார்.  அப்போது, பொதுமக்கள் வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். பொதுமக்களின் மனுக்களை பெற்ற அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன்பெரியசாமி அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அவை அனைத்தும் விரைவில் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதியளித்தனர்.

அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் பொதுமக்களின் குறைகளை கேட்கவும், வார்டுக்குட்பட்ட பகுதிகளின் நிலவரங்களை நேரில் கண்டறியவும் நடந்தே சென்றபோது பொதுமக்கள் கடந்த 10ஆண்டுகளாக இந்த பகுதிகளில் சாலைகள் அமைத்து தரவில்லை, கழிவுநீர் கால்வாய்கள் முறையாக இல்லாத நிலை உள்ளது.
கடந்த காலத்தில் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இதுபோன்று நேரில் வந்து குறைகளை கேட்டதில்லை, ஆனால் நீங்கள் வந்து கேட்டது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆகவே இந்த பகுதிகளில் முறையாக சாலைகள், கழிவுநீர் கால்வாய் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இந்த பகுதியிலுள்ள ரவுண்டான பகுதியில் இரண்டு பூங்காக்கள் இருந்து வருகின்றன.

அதில் ஒன்று தேவையற்ற அசம்பாவித செயல்களில் சிலர் ஈடுபடுவதால் அதில் ஒன்றை சமப்படுத்தி மற்றொன்றை மட்டும் நல்லமுறையில் மக்கள் பயன்பாட்டிற்கு அந்த பூங்காவை சீரமைத்து தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை வைத்தபோது அமைச்சர் கீதாஜீவன் நேரடியாக குறிப்பெடுத்துக்கொண்டு மேயர் ஜெகன்பெரியசாமியிடம் இப்பகுதி ஆய்வின்போது இந்த குறைபாடுகளை எப்படி தீர்த்து வைக்கலாம் என்று இருவரும் பொதுமக்கள் மத்தியில் கலந்து ஆலோசித்து பேசியதை பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கைதட்டி வரவேற்று ஆர்ப்பரித்தனர். இதில், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், கலைச்செல்வி,  பகுதி செயலாளர் ஜெயக்
குமார்,  கவுன்சிலர் தனலட்சுமி, வட்ட செயலாளர் சேகர்,  பகுதி இளைஞரணி அமைப்பாளர் ரவி, இந்திய கம்யூனிஸ்கட்சி மாநகர செயலாளர் ஞானசேகர், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Thoothukudi ,Minister ,Geethajeevan ,Mayor ,Jaganperiyaswamy ,
× RELATED தூத்துக்குடியில் கனிமொழியை ஆதரித்து...