அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் ஓடும் ரயிலில் மதுரை எஸ்ஐ மரணம்

மதுரை, மார்ச் 19: ஓடும் ரயிலில் பணியில் இருந்த ரயில்வே எஸ்ஐ மாரடைப்பால் மரணமடைந்தார். தேனி மாவட்டம், கம்பம் அருகே ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் ஜெயசீலன்(60). மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வந்த இவர், தெப்பக்குளம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி ஆசிரியை, ஒரு மகள் திருமணமாகி ராயப்பன்பட்டியில் கணவருடன் வசித்து வருகிறார். ஜெயசீலன், சென்னையில் இருந்து மதுரைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன்தினம் இரவு கிளம்பினார். கொடைரோடு ரயில் நிலையத்திற்கு வந்தபோது, திடீரென ஜெயசீலனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த ரயில்வே டாக்டர்கள், ஜெயசீலனை பரிசோதித்தனர். இதில், ஜெயசீலன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரிந்தது. இதுகுறித்து அவரது மனைவிக்கு, ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர். பின்னர் ஜெயசீலனின் உடல், அவரது சொந்த ஊரான ராயப்பன்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு போலீஸ் மரியாதையுடன், ஜெயசீலனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அடுத்த மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில், பணியில் இருந்த எஸ்ஐ மாரடைப்பால் இறந்த சம்பவம், சக ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: