×

மறைமலைநகரில் பழுதடைந்த வேன் கடத்தல்: 4 பேர் கைது

செங்கல்பட்டு, மார்ச் 19: மறைமலைநகரில், பழுதடைந்த வேனை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான டெம்போ வேன், கடந்த ஒரு மாதத்துக்கு முன் விபத்தில் சிக்கி, முன்பகுதி முழுவதும் சேதமானது. இதனால் இழப்பீடு பெறும் வகையில், அந்நிறுவனத்துக்கு வெளியே ஜிஎஸ்டி சாலையை ஒட்டிய பகுதியில், இந்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த வேனை பழுதுபார்க்க, சிலரை வேனின் உரிமையாளர் ரித்தீஷ் அழைத்து வந்துள்ளார். அப்போது வேன் மாயமானது கண்டு, அதிர்ச்சியடைந்து, மறைமலைநகர் போலீசில் புகார் செய்ய சென்றார்.

ஆனால் அவரது புகாரை வாங்காமல் போலீசார் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.அதனால் ரித்தீஷ், அப்பகுதியில் உள்ள ரெகவரி வாகன உரிமையாளர்களிடம் தீவிரமாக விசாரித்தார். இதில், ஒரு தனியார் ரெகவரி வாகன உரிமையாளர், தனது வாகனத்தின் மூலம், இந்த வேனை விழுப்புரத்தில் விட்டுவிட்டு வந்தது  தெரியவந்தது. உடனே அந்த தனியார் ரெகவரி வாகன உரிமையாளரை விழுப்புரத்துக்கு ரித்தீஷ் காரில் அழைத்து சென்றார் . அங்கு ஒரு காயாலங்கடை அருகே பழுதான டெம்போ வேன் நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு நின்றிருந்த 2 மர்ம நபர்களை தனியார் ரெகவரி வாகன உரிமையாளர் அடையாளம் காட்டினார்.

அவர்களை மடக்கி பிடித்து விழுப்புரம் போலீசாரின் உதவியுடன் நேற்று மாலை மறைலைநகர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அதில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விஜி (30), கமல் (26), சுரேஷ் (30), ராமகிருஷ்ணன் (34) ஆகியோர் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு, டெம்போ வேனை கடத்தி சென்றதாக ஒப்பு கொண்டனர். புகாரின்பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேனை கடத்தி சென்ற 4 பேரையும் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Kiramalai Nagar ,
× RELATED மறைமலைநகர் அருகே 5 ஆயிரம் நெல்...