ஒகேனக்கல்லில் ₹18 கோடியில் வளர்ச்சித் திட்டப்பணிகள்

தர்மபுரி, மார்ச் 19: ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் ₹18 கோடியில் வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று கலெக்டர் சாந்தி திடீரென ஆய்வு செய்தார். தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை நவீன முறையில் மேம்படுத்தும் பணி ₹18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒகேனக்கல் சுற்றுலா தலம் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படுகிறது. இதற்காக 3.10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு நுழைவு வாயில், பார்வையாளர் மாடம், பரிசல் நிறுத்துமிடம், எண்ணை குளியலுக்கான இடங்கள், உடை மாற்றும் அறை மற்றும் பாதுகாப்புடன் குளிக்க வசதி ஏற்படுத்துதல், டிக்கெட் கவுண்டர், பரிசல் சென்றடையும் பகுதி, மசாஜ் பகுதி, ஆழ்துளைக்கிணறு, உணவகம், சொகுசு நடைபாதை, எண்ணெய் கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், காட்சி கோபுரம் போன்ற பல்வேறு கட்டுமானங்கள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை நேற்று, கலெக்டர் சாந்தி திடீரென ஆய்வு செய்தார். தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, பணிகளை தரமாகவும், குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஒகேனக்கல் சுற்றுலா மையம் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின்போது, தர்மபுரி மாவட்ட சுற்றுலா அலுவலர் கதிரேசன், பென்னாகரம் ஒன்றியக்குழுத் தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் கெம்புராஜ், பென்னாகரம் பிடிஓ வடிவேலன், கூத்தபாடி ஊராட்சி மன்றத் தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: