×

மகளிர் முன்னேற்றத்திற்கு குன்றக்குடி ஆதீனம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேச்சு

காரைக்குடி, மார்ச் 18: காரைக்குடி அருகே குன்றக்குடியில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் மகளிர் கல்வியியல் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாப்பட்டது. உதவி பேராசிரியர் கனிமொழி வரவேற்றார். தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் விழாவுக்கு தலைமை வகித்து பேசியதாவது: குன்றக்குடி ஆதீனம் மக்களின் ஆதீனம். கடைக்கோடி மக்களின் வாழ்க்கையில் பொருளாதார ரீதியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதுமட்டும் அல்லாமல் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, தலித் மக்கள் என அனைவருக்கமான ஆதீனமாக செயல்பட்டு வருகிறது. பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டு வரும் ஆதீனமாக 75 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது.

ஏழை பெண்களுக்கு குடும்ப பிரச்னைகள் உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண மங்கையர்கரசி மாதர் சங்கம், இசைஞானியார் மாதர் சங்கம் என்ற அமைப்புகளை மகாசன்னிதானம் 50 ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கி, பெண்கள் முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்தார்கள். குன்றக்குடி ஆதீனத்தின் தன்னார்வு தொண்டராக லலிதாம்பாள் செயல்பட்டு வந்தார். தற்போது 90 வயதை கடந்தும் இன்றும் பல்வேறு சமூக தொண்டு செய்து வருகிறார்.  அவரை இந்த மகளிர் தினவிழாவில் பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறோம். மகளிர் என்பவர் ஒரு தினத்தில் கொண்டாப்படுவர் அல்ல. பெண் என்பவர் அன்பின் ஆளுமை. தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல், வேர்களாக இருந்து மனித குலத்தை செதுக்குபவர்கள் பெண்கள்.
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு. ஆனால் உலகத்தில் 50 சதவீத இட ஒதுக்கீடு தந்தவர் சிவபெருமான். தனது உடலில் சரிபாதியை வழங்கினார். மகளிர் காவல்துறை துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதை விழாவாக கொண்டாட தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  அரசின் திட்டங்கள் இல்லாத காலத்திலேயே மகளிர் கூட்டுறவு சங்கம் உள்பட பல்வேறு  மகளிர் மேம்பாட்டுக்கு என குன்றக்குடி ஆதீனம் சார்பில் பல்வேறு அமைப்புகள் துவக்கப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் குன்றக்குடி வேளாண்அறிவியியல் நிலைய தலைவர் செந்தூர்குமரன், மக்கள் கல்வி நிலைய தலைவர் நாச்சிமுத்து , கல்வியியல் கல்லூரி முதல்வர் செலின் அமுதா, எஸ்.ஐ கமீலா பானு, பேராசிரியர்கள் காயத்ரி, காந்திமதி, ஜஸ்வர்யா ராஜா, ராமநாதன், ஆதீன தனி உதவியாளர்கள் சிங்காரம், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kunrakkudi ,
× RELATED சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் முல்லைக்குத் தேர் கொடுக்கும் பாரிவிழா