×

கோயில் நிலத்தில் மருத்துவமனை கட்டிடம் கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு

மதுரை, மார்ச் 18: கோயில் நிலத்தில் மருத்துவமனை கட்டிடம் கட்டுவது தொடர்பான வழக்கில் கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த மாதவன், சோனைமுத்து, தட்சிணாமூர்த்தி ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை தெற்கு தாலுகா சின்ன அனுப்பானடி பகுதியில் 400 ஆண்டு பழமையான குருநாதசாமி கோயில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றிலும் ஏராளமான நிலங்கள் கோயிலுக்கு சொந்தமாக உள்ளது. இதில் குறிப்பிட்ட நிலத்தை ஊராட்சியும், அரசுத் துறையினரும் ஆக்கிரமித்துக் கொண்டனர். இது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட நிலங்கள் கோயிலுக்கு சாந்தமானது என தீர்ப்பானது.

தற்போது சின்னஅனுப்பானடி பகுதி மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், கோயில் ஊரணிக்கான நிலத்தில் அரசு மருத்துவமனை விரிவாக்க கட்டிடம் கட்டப்படுகிறது. ஏற்கனவே கோயில் நிலத்தில் விஏஓ அலுவலகம், ரேஷன் கடை, சத்துணவு மையம், ஆரம்ப சுகாதார நிலையம், தண்ணீர் தொட்டி உள்ளிட்டவை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதனால், கோயிலின் பிரதான வழி தடைபடுவதுடன், பக்தர்களுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது.

எனவே, மருத்துவமனை விரிவாக கட்டிடம் கட்டத் தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் நீதிமன்ற உத்தரவை மீறி எப்படி கோயில் நிலத்தில் கட்டிடம் கட்ட அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து, மதுரை கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை ஏப்.5க்கு தள்ளி வைத்தனர்.

Tags : Corporation ,
× RELATED நெருப்பெரிச்சல் பகுதியில் விபத்தில்...