×

கோவை அரசு மருத்துவமனையில் பிறவி இதய கோளாறால் பாதிக்கப்பட்ட 6 குழந்தைகளுக்கு அதிநவீன சிகிச்சை

கோவை, மார்ச் 18: கோவை அரசு மருத்துவமனையில் பிறவி இதய கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட 6 குழந்தைகளுக்கு அவர்களின் இதய சுவர்களில் உள்ள ஓட்டைகள் அதிநவீன வடிகுழாய் சிகிச்சையின் மூலம் சரிசெய்யப்பட்டது.  கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதயவியல் துறை செயல்பட்டு வருகிறது. இந்த துறையின் மூலம் 6 பேருக்கு பிறவி இதய குறைபாடான இதய சுவர்களில் உள்ள ஓட்டைகள் அதிநவீன வடிகுழாய் சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையை சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை நல இருதயவியல் நிபுணர் மற்றும் துறைத்தலைவர் டாக்டர் முத்துக்குமரன், கோவை மருத்துவக்கல்லூரி இதயவியல் துறை தலைவர் மற்றும் உதவி பேராசிரியர்கள் செய்தனர்.

இதில், 3 குழந்தைகளுக்கு இதய மேலறை இடைத்துளை சிகிச்சையும், ஒரு குழந்தைக்கு இதய கீழ் அறை பிரிசுவர்த்துளை சிகிச்சையும், இரண்டு குழந்தைகளுக்கு நிலைத்த நாளத்தமணி குறைபாடுகள் அதிநவீன வடிகுழாய் முறையின் மூலம் சரிசெய்யப்பட்டது. இது குறித்து கோவை அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது: இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 2.5 லட்சம் குழந்தைகள் இதய குறைபாடு பிரச்னையில் பிறக்கின்றன. இவர்களில் ஐந்தில் ஒரு குழந்தை கடுமையான இதய நோயால் பாதிக்கப்படுகின்றன. இதுபோன்ற இதய நோய் குறைபாடுகளை தேசிய குழந்தை நலத்திட்டம் (ஆர்பிஎஸ்கே) மூலம் முதற்கட்ட பரிசோதனையில் கண்டறிந்து, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற பாதிப்புகளுக்கு திறந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும். ஆனால், தற்போது வடிகுழாய் சிகிச்சை மூலம் 45 நிமிடங்களுக்கு குறைவான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையின் இதயவியல் துறை குழுவினர், அப்போலோ மருத்துவர்களுடன் இணைந்து 6 பேருக்கு அதிநவீன சிகிச்சை அளித்துள்ளனர். இது காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடந்தது. தனியார் மருத்துவமனைகளில் வடிகுழாய் சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும். கோவை அரசு மருத்துவமனையில் 6 நோயாளிகளுக்கு முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Coimbatore Government Hospital ,
× RELATED ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தில்...