புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

புதுக்கோட்டை,மார்ச் 18: புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடக்கிறது என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். உலக தண்ணீர் தினமான வரும் 22ம் தேதியன்று காலை 11 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினை பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம், திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையுடன் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மையில் தன்னிறைவு பெற்றுள்ள கிராமங்களை அறிவித்தல் மற்றும் இதரப் பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளன.

அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அதிக அளவில் கலந்து கொண்டு கிராம சபைக் கூட்டத்தைச் சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Related Stories: