×

மத நல்லிணக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு சீர்வரிசை வழங்கிய மும்மதத்தினர்: இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக திகழ்ந்தது

புதுக்கோட்டை, மார்ச் 18: மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக புதுக்கோட்டையில் திறக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு மும்மதத்தினர் சீர்வரிசை எடுத்து சென்று வழங்கினர். இது இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக திகழ்ந்தது. புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட காமராஜபுரம் 9ம் வீதியில் மஸ்ஜித் முஹம்மது இப்ராஹீம் ஜும்ஆ பள்ளிவாசல் பழமையானது. இந்த பள்ளிவாசல் கடந்த சில ஆண்டுகளாக புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பள்ளிவாசல் திறப்பை முன்னிட்டு பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் அனைத்து கட்சி பிரமுகர்களுக்கும் அதே போல் அனைத்து சமுதாய மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து பள்ளிவாசல் திறப்புக்கு அனைத்து கட்சி பிரமுகர்களும் வருகை தந்து சிறப்பித்தனர். இந்நிலையில் இந்த பள்ளிவாசல் திறப்பை முன்னிட்டு கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள், அதேபோல் இந்து மதத்தைச் சேர்ந்த குருக்கள், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் என இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து சமத்துவமாக பல்வேறு வகையான பொருட்களை சீராக எடுத்துச் சென்றனர். இது மத ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது. மேலும் சீரெடுத்துச் சென்ற அனைத்து சமுதாய மக்களையும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் சால்வை அணிவித்து ஆரத்தழுவி வாழ்த்துக்கள் தெரிவித்து வரவேற்றனர்.

மேலும் பள்ளிவாசல் நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையிலும் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள ஓம் சக்தி கோவிலில் இருந்து கோயில் நிர்வாகம் சார்பில் பள்ளிவாசல் திறப்பிற்கு சீர் எடுத்துச் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவிற்கே இது உதாரணமாக திகழும் வகையில் மத ஒற்றுமைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக இருப்பதாகவும் இந்த ஒற்றுமை தான் இயற்கை என்றும் சிலர் வாக்குக்காக பிளவை ஏற்படுத்த நினைத்தாலும் தமிழ்நாட்டில் அது எப்போதும் நடக்காது என்றும் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருப்பது தான் அரசியல் சட்டமும் கூட அந்த ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நேற்று காமராஜபுரத்தில் பள்ளிவாசல் திறப்பு நடைபெற்றுள்ளது. இது மகிழ்ச்சியை தருவதாகவும் தெரிவித்தனர்.

Tags : Trinitarians ,Masjid ,India ,
× RELATED பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம்...