×

40 ஆண்டுகளுக்கு பிறகு எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா கோலாகலம்

கீழ்வேளூர், மார்ச் 18: எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பத்திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் புனரமைக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்துக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு பல்வேறு காரணங்களால் 40 ஆண்டுகளாக தெப்பத்திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்தாண்டு தெப்பத்திருவிழா நடத்த கோயில் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக சுமார் 25 அடி நீளம், 25 அடி அகலத்துடன் பிரமாண்டமான முறையில் 150 ‌மிதவைகள் கொண்டு தெப்பம் கட்டமைக்கப்பட்டது. தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

இந்நிலையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு தெப்பத்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு மலர் அலங்காரத்தில், வள்ளி தெய்வானையுடன் சுவாமி ஆலயத்தை சுற்றி வலம் வந்து பின்னர் கோயில் முன் உள்ள தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளினார். நாதஸ்வரம், வயலினுடன் மேள தாளங்கள் முழங்க தெப்பம் மூன்று முறை வலம் வந்ததது. இதில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்புக்காக தெப்பத்தை பின் தொடர்ந்து காற்று நிரப்பப்பட்ட மிதவை படகுடன் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் தயார் நிலையில் இருந்தனர். டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Theppathruvizha Kolakalam ,Ethukudi Subramanya Swamy Temple ,
× RELATED 10 ஆண்டுக்குபின் பொய்கைக்கரைப்பட்டி...