கோயில்களில் பங்குனித் திருவிழா: மானாமதுரை வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை அமோகம்

மானாமதுரை, மார்ச் 17: மானாமதுரையி்ல் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள் மட்டுமன்றி ஆடுகள், கோழிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள ஆட்டுச்சந்தையில் நேற்று காலை முதலே ஆடு, கோழி விற்பனை களைகட்டத் துவங்கியது. தாயமங்கலம், திருப்புவனம், இருக்கன்குடி உள்ளிட்ட ஊர்களில் உள்ள மாரியம்மன் கோயில்களில் பங்குனி பொங்கல் விழா நடைபெற உள்ளது. பங்குனி திருவிழாவில் பக்தர்கள் ஆடுகள், கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இதற்காக ஆடு, கோழிகளை வாங்க ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று மானாமதுரை வாரச்சந்தையில் குவிந்தனர்.

நேற்று சந்தைக்கு 500க்கும் மேற்பட்ட ஆடுகளும் 800க்கும் மேற்பட்ட கோழி, சேவல்களும் விற்பனைக்காக வந்தன. இவற்றை வாங்க போட்டி நிலவியது, இது குறித்து வியாபாரி செந்தில்குமார் கூறுகையில், ‘‘வழக்கமாக சந்தையில் சேவல் கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரையிலும், கோழி கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரையிலும் தரத்திற்கு ஏற்ப விலை போகும். இந்த வாரம் சேவல் ரூ.350 முதல் ரூ.400 வரையிலும் கோழி ரூ.450 முதல் 550 வரையிலும் விற்றது. சராசரியாக எட்டு கிலோ எடையுள்ள ஆடு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைத்தது’’ என்றார்.

Related Stories: