×

வடமதுரை பகுதியில் உள்ள மிளகாயில் இலை சுருட்டை நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை

வடமதுரை, மார்ச் 17: வடமதுரையில் இலைச் சுருட்டை நோய் தாக்குதலால் மிளகாய் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தோட்டகலைத்துறையினர் உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான காணப்பாடி, வேலாயுதம்பாளையம், சிங்காரக் கோட்டை, தென்னம்பட்டி, பிலாத்து, ஆண்டிபட்டி, கம்பளியம்பட்டி, சித்துவார்பட்டி, அழகர் நாயக்கன்பட்டி பெரும்புள்ளி, கொசவபட்டி ஆகிய கிராமங்களில் மிளகாய் விவசாயம் பரவலாக நடைபெற்று வருகிறது. தற்போது மிளகாய் நன்கு விளைச்சல் வரக்கூடிய நேரத்தில் பல்வேறு நோய்களின் தாக்குதலால் பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக இலைச் சுருட்டைநோய் பாதிப்பு இப்பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. பிலாத்து கிராமம் பாரதிபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனிசாமி (55) என்பவர் கூறுகையில், ஒரு ஏக்கர் நிலத்தில் மிளகாய் நடவு செய்துள்ளேன். இந்த வருடம் மிளகாய் பயிரிட்டால் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில். மிளகாய் நாற்றுக்களை விலைக்கு வாங்கி நடவு செய்தேன். ஆனால் விளைச்சல் இல்லை.  இதற்கு காரணம் இலைச் சுருட்டை நோய் தாக்குதல். இந்நோய் தாக்குதல் மிளகாய் விவசாயத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மிளகாய் விவசாயம் செய்ய ஒரு ஏக்கருக்கு நாற்று மட்டும் ரூ.7000 ஆகும். அத்துடன் நிலத்திற்கான உழவு, பாத்திகள் அமைக்க செலவு ரூ.5000 ஆனது. அத்துடன் நடவு செய்ய ரூ.3000 கொடுத்துள்ளேன். இந்த செலவுகளுக்கு இடையே நீர் பாய்ச்சி பராமரித்து, மிளகாய் வயலில் மூன்று முறை களையெடுக்க ரூ.5000 ரூபாய் செலவு செய்துள்ளேன்.

அத்துடன், உரம், பூச்சி மருந்து மற்றும் மருந்து அடிக்க ஆள்செலவு, உரம் வைக்க கூலியாள் செலவு என்று ரூ.5000 செலவு செய்து நன்கு பராமரித்து வந்தேன். தற்போது மிளகாய் காய்த்து நல்ல விலை கிடைக்கக்கூடிய நேரத்தில் இந்த இலை சுருட்டை நோய் தாக்கி பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த மூன்று முறை பூச்சிக்கொல்லி மருந்து அடித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. இதனால் மிளகாய் விவசாயம் செய்யக்கூடிய எங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மிளகாய் விவசாயம் செய்துள்ள நிலங்களை பார்வையிட்டு, தகுந்த இலைச் சுருட்டை நோய் தாக்குதலில் இருந்து செடிகளை பாதுகாக்க போதுமான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றார்.

Tags : North Madurai ,
× RELATED பெரியபாளையம் அருகே வடமதுரை...