தரகம்பட்டியில் 20ம் தேதி வேளாண்மைதுறை சார்பில் உள்ளூர் பயிர் ரகங்கள் கண்காட்சி

கரூர்: கரூர் மாவட்டம் தரகம்பட்டி மாதா மஹால் திருமண மண்டபத்தில், உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி 20ம் தேதி நடைபெறுவதால் விவசாயிகள் உள்ளூர் உயர் ரகங்களை காட்சிப்படுத்த கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டதில் மார்ச் 20ம்தேதி அன்று வேளாண்மைத்துறை சார்பில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் தரகம்பட்டி மாதா மஹால் திருமண மண்டபத்தில், உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில் விவசாயிகள் கலந்து கொண்டு விரும்பத்தக்க குணங்களையுடைய உள்ளூர் மற்றும் பாரம்பரிய பயிர் ரகங்களை காட்சிப்படுத்த உள்ளனர்.

அதன் மூலம் முக்கிய பண்புகளை கண்டறிந்து ரக மேம்பாட்டிற்கான ஆய்வுகளில் பயன்படுத்தினால் நமது பகுதிக்கேற்ற சிறந்த ரகங்களை உருவாக்க முடியும். வேளாண் விஞ்ஞானிகள் வீரியமிக்க குணங்களை கொண்ட ரகங்களை கண்டறிந்து புதிய ரகங்களை உருவாக்க வசதியாக அமையும். இந்த கண்காட்சியில் உள்ளூர், பராம்பரிய ரகங்கள் குறித்த கண்காட்சி அரங்குகள், உணவு அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. மேலும், விவசாயிகள் வேளாண் விஞ்ஞானிகள், கலந்துரையாடல், பாரம்பரிய மற்றும் உள்ளுர் ரகங்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள், சாகுபடி மற்றும் வணிகம் சார்ந்த கலந்துரையாடல்கள் மற்றும் மரபு சார் பன்முகத்தன்மை குறித்த தொழில்நுட்ப உரை ஆகியவற்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த உழவர்களுக்கான விழாவில் உழவர்கள் தங்கள் பகுதியில் விளையும், சிறந்த பண்புகளைக்கொண்ட பராம்பரிய நெல் மற்றும் பிற பயிர்களின் உள்ளூர் உயர் ரகங்களை காட்சிப்பொருளாக வழங்கி பங்கேற்கலாம். மேலும், உழவர்கள் காட்சிக்கு வைக்கும் அங்கக வேளாண்மையில் பயிர் செய்யப்பட்ட சிறப்பு வேளாண் விளை பொருட்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம். கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் மக்களும் இந்த கண்காட்சி விழாவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: