×

எஸ்பி சுந்தரவதனம் தகவல் தோகைமலை அருகே கோயில் உண்டியலை வேலால் உடைத்து ரூ.75,000 திருட்டு

தோகைமலை: தோகைமலை அருகே கோயில் உண்டியலை உடைத்து ரூ.75,000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டம் தோகைமலை அருகே போத்துராவுத்தன்பட்டி ஊராட்சி வடுகபட்டியில் இந்து சமய அறநிலையதுறைகட்டுபாட்டின்கீழ் அங்காளபரமேஸ்வரி கோயில் உள்ளது. நேற்றுமுன்தினம் கோயில் பூசாரி வழக்கமான பூஜைகளை முடித்த பிறகு கோயிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று உள்ளார். அன்று நள்ளிரவு கோயிலில் இருந்து அலாரம் அடித்ததால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் பூசாரிக்கு தகவல் தெரிவித்தனர். பூசாமி மற்றும் பொதுமக்கள் வந்து பார்த்தபோது கோயில் கேட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கோயிலின் முன் மண்டபத்தில் பொருத்தப்பட்டு இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் 75 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும் கோயிலில் உள்ள அலாரம் அடித்ததால் கொள்ளையர்கள் அவசர, அவசரமாக உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றபோது, உண்டியலில் இருந்த ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்தது. பின்னர் சம்பவம் குறித்து தோகைமலை காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் அங்கு வந்த போலீசார் கோயிலில் நடந்த திருட்டு குறித்து விசாரணை செய்தனர். இதேபோல் வடுகபட்டியில் மற்றொரு பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் பூட்டை உடைத்து சென்ற மர்மநபர்கள் அங்கு உண்டியல் இல்லாததால் கோயிலில் இருந்த 2 இரும்பு வேல்களை எடுத்து வந்து அங்காளபரமேஸ்வரி உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்று உள்ளனர். பின்னர் ஒரு வேலை மட்டும் கோயிலில் வைத்து விட்டு, மற்றொன்றை அருகில் உள்ள ஒரு மின் கம்பத்தில் வைத்து விட்டு சென்றது போலீஸ் விசாரனையில் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து தோகைமலை போலீசார் வடுகபட்டியில் உள்ள அங்காளபரமேஸ்வரி திருக்கோயிலில் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரொக்கப்பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : SP ,Sundaravathanam ,Tokaimalai ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்