குன்னத்தூர், திருவேங்கடநாதபுரம் பஞ்சாயத்து பகுதிகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து நேரடி குடிநீர் விநியோகம் சுத்திகரித்து வழங்க பொதுமக்கள் வலியுறுத்தல்

நெல்லை, மார்ச் 17: தாமிரபரணி ஆற்றில் இருந்து பில்டர் செய்யாமல் நேரடியாக பம்பிங் செய்து சுகாதாரமற்ற முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 4 மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது ஜீவநதியான தாமிரபரணியாகும். இந்த ஆற்றில் இருந்து தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல கிமீ தூரத்தில் உள்ள மாவட்ட மக்களுக்கு கொண்டாநகரம், சுத்தமல்லி, சீவலப்பேரி பகுதிகளில் உள்ள உறைகிணறுகள் மூலம் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு பம்பிங் செய்து  குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.  ஆனால் கைக்கு எட்டிய தூரத்தில் தாமிபரணி ஆறு இருந்தும் குன்னத்தூர், திருவேங்கடநாதபுரம் பஞ்சாயத்து பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குன்னத்தூர், திருவேங்கடநாதபுரம் பஞ்சாயத்துக்கள் பாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியாகும்.

 இந்த இரு பஞ்சாயத்து பகுதிகளிலும் சுமார் 7 ஆயிரம் வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டி அப்பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் பல ஆண்டுகளுக்கு முன் இரு உறைகிணறுகள் அமைக்கப்பட்டன. கால போக்கில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும் உறைகிணறுகள் சரிந்துவிட்டதால் குடிநீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குன்னத்தூர், திருவேங்கடநாதபுரம் பஞ்சாயத்துகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் கொண்டுவர குழாய்கள் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு குழாய்கள் மூலம் மேல்நிலை தேக்க தொட்டிகளில் நிரப்பி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

 ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க குழாய்கள் அமைக்கப்பட்ட பகுதிகள் முழுவதும் மயானம் நிறைந்த பகுதியாகும். இங்கு இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய இறுதிச்சடங்குகள் முடிந்ததும் கழிவு பொருட்கள், பூமாலைகள், ஆடைகள் தாமிபரணி ஆற்றில் விடப்படுகின்றன. இதனால் தண்ணீர் மாசுபடுகிறது. மின்மோட்டார் மூலம் எடுக்கப்படும் குடிநீர் வடிகட்டாமல் சுகாதாரமற்ற நிலையில் மேல்நிலை தேக்க தொட்டியில் ஏற்றப்படுகிறது. இத்தகைய குடிநீரே குன்னத்தூர், பஜார் பகுதி, கீழ குன்னத்தூர்,  ராக்கன் திரடு காளியம்மன் கோயில் தெரு, இந்திரா காலனி பகுதிக்கும், திருவேங்கடநாதபுரம், அத்திமேடு, பாடசாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அப்படியே சுத்திகரிக்கப்படாத நிலையில் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் தண்ணீர் கலங்கலாகவும் குடிக்க முடியாத நிலை காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதன்காரணமாக மஞ்சள் காமாலை, மர்ம காய்ச்சல் பரவ வாய்ப்புகள் உள்ளது.

இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கழிவுகள் அடிக்கடி தங்கி விடுவதால் தண்ணீர் மாசுபட்டு காணப்படுகிறது. அடிக்கடி மேல்நிலை தேக்க தொட்டியை சுத்தம் செய்ய வேண்டிய நிலை தொடர்கிறது.  எனவே கொண்டாநகரம், சுத்தமல்லி பகுதியில் இருந்து கொண்டுவரப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இணைப்பு குன்னத்தூர், திருவேங்கடநாதபுரம் பகுதிகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக  ஊராட்சி ஒன்றியம், மாவட்ட நிர்வாகம், கிராசபை கூட்டங்களில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.

Related Stories: