×

வாலிபர் கொலை வழக்கில் தூத்துக்குடி எஸ்பி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம்

விழுப்புரம், மார்ச் 16:  விழுப்புரம் அருகே நிகழ்ந்த வாலிபர் கொலை வழக்கில் தூத்துக்குடி எஸ்பி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். விழுப்புரம் அருகே குச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (24). கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி. கரும்பு வெட்டியதற்கு கூலி வழங்கும் பிரச்னை தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி திருநாவலூர் அருகே சேந்தமங்கலம் என்ற இடத்தில் சென்றபோது ஆனந்தனை வழிமறித்த விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த செந்தில், ராஜீவ்காந்தி, ஏகாம்பரம், அருள்முருகன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். இது குறித்து திருநாவலூர் போலீசார் எஸ்சிஎஸ்டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்சிஎஸ்டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான அப்போதைய உளுந்தூர்பேட்டை டிஎஸ்பியும், தற்போது தூத்துக்குடி எஸ்பியாக பணியாற்றிவரும் பாலாஜி சரவணன் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி பாக்கியஜோதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சாட்சியான தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதனை நீதிபதி பதிவு செய்து கொண்டு வழக்கு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags : SP ,Villupuram ,
× RELATED தகவல் பகிர 772 வாட்ஸ் அப் குழுக்கள்...