×

நெல்லையில் கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு நடைபயணம் டாக்டர்கள், செவிலியர்கள் திரளாக பங்கேற்பு

நெல்லை, மார்ச் 16: கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தையொட்டி நெல்லையில் நடந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் திரளாகப் பங்கேற்றனர்.  உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரம் ஆண்டுதோறும் மார்ச் 12 முதல் 18ம்தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. கேட்ராக்ட், கண் பார்வை கோளாறு, கண் நீர் அழுத்த நோய் ஆகியவற்றால் பார்வை இழப்பு ஏற்படுகிறது. கண் நீர் அழுத்த நோயை சிலர் பார்வை குறைவு என கவனக்குறைவாக இருப்பதால்,  முழு பார்வையையும் இழந்து திண்டாடுகின்றனர்.

உலகம் முழுவதும் 8 கோடி பேர் கண் நீர் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் 1.6 கோடி பேருக்கு கண் நீர் அழுத்த நோய் பாதிப்பு உள்ளது. உலக சுகாதார நிறுவனம், உலக கண்நீர் அழுத்த நோய் நிறுவனம் ஆகியவை நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள், டாக்டர்கள், பொதுமக்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் விழிப்புணர்வு நடை பயணம் சந்திப்பு ரயில் நிலையம் அருகே நேற்று துவங்கியது.

 இந்திய மருத்துவ சங்கத்தின் நெல்லை கிளைத் தலைவர் டாக்டர் சுப்பிரமணியன், அரவிந்த் கண் மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தனர். மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் மீனாட்சி, தலைமை மருத்துவர் முகைதீன் அப்துல்காதர், இந்திய மருத்துவ சங்கச் செயலாளர் முகமது இப்ராகிம், நிதி மேலாண்மை செயலாளர் பிரபுராஜ், துணைத் தலைவர் அபுபக்கர் முன்னிலை வகித்தனர். நெல்லை சந்திப்பு இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் வாழ்த்திப் பேசினார். இதில் அரவிந்த் கண் மருத்துவமனை பயிற்சி டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

 நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகில் இருந்து துவங்கிய இந்த நடைபயணம் சந்திப்பு பஸ்நிலையம் வழியாக அரவிந்த் கண் மருத்துவமனையில் நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு நடை பயணத்தின்போது 40 வயதிற்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோயாளிகள், பரம்பரை, பரம்பரையாக பாதிப்பு இருப்பவர்களுக்கு கண் நீர் அழுத்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் பார்வை இழப்பை தடுத்து விடலாம் என பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

Tags : Nellai ,
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!