காதலன் இறந்த ஒரு மாதத்தில் காதலியும் தூக்கிட்டு தற்கொலை: மாதவரம் அருகே சோகம்

மாதவரம், மார்ச் 16: மாதவரம் அருகே வியாசர்பாடியில் காதலன் இறந்த ஒரு மாதத்தில் காதலியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி மல்லிப்பூ காலனி எச். பிளாக் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் (45). இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன். 2வது மகள் மைத்தீஸ்வரி (18), பாரிமுனையில் உள்ள பாரதி ஆர்ட்ஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிகாம் படித்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல சுரேஷ் ஆட்டோ ஓட்டச் சென்று விட்டார். அவரது மனைவியும் வேலைக்குச் சென்று விட்டார். காலை 11 மணியளவில் சுரேஷ், மகளுக்கு போன் செய்துள்ளார். அவர் போனை எடுக்காததால், பக்கத்து வீட்டில் சொல்லி, வீட்டிற்குச் சென்று பார்க்கும்படி கூறியிருக்கிறார். கதவை திறக்காததால் உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் ஹால் மின்விசிறியில் துப்பட்டாவால் மைத்தீஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து சுரேஷ் மற்றும் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வீட்டுக்கு வந்து மகளின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். பின்னர் வியாசர்பாடி போலீசார், மைத்தீஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  போலீசாரின் விசாரணையில், மைத்தீஸ்வரிக்கு கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த  பிரவீன் (17) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளார். கடந்த மாதம் 10ம் தேதி பிரவீன் காதலி மைத்தீஸ்வரிக்கு போன்செய்து அவரை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு மைத்தீஸ்வரி இன்று முடியாது, திங்கட்கிழமை பார்க்கலாம் என கூறியுள்ளார்.

அப்போது பிரவீன், நீ வரவில்லை என்றால், நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வேன் எனக்கூறி சண்டை போட்டுள்ளார். இருவருக்கும் தகராறு முற்றியது. சிறிது நேரத்தில், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு, பிரவீன் தற்கொலை செய்து கொண்டார். காதலன் தற்கொலை செய்துகொண்ட அன்று மைத்தீஸ்வரியும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் அவரை காப்பாற்றி அறிவுரை சொல்லி வீட்டில் இருக்க வைத்துள்ளனர். ஆனால் நேற்று முன்தினம் யாரும் இல்லாதபோது மைத்தீஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன்னால்தான் காதலன் இறந்துவிட்டான் என்று எண்ணிய அவர், தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Related Stories: