×

ஆகாயத்தாமரை முளைத்து அசுத்தமாக காணப்பட்டது பாசி படர்ந்து கிடந்த கோயில் குளங்கள் ‘பளிச்’ திருவில்லிபுத்தூர் நகராட்சிக்கு பக்தர்கள் பாராட்டு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் நகரில் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான இரண்டு முக்கிய குளங்கள் சுத்தமாக காட்சியளிப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவில்லிபுத்தூர் நகரை பொறுத்தவரை ஏராளமான கண்மாய், குளங்கள் உள்ளன. குறிப்பாக ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான குளங்களான திருமுக்குளம், திருப்பாற்கடல் குளம், வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான பழைய குளம், புதிய குளம், விருதுநகர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய கண்மாயான பெரியகுளம் கண்மாய், பொன்னாங்கண்ணி கண்மாய், மொட்ட பத்தான் கண்மாய், வடமலை குறிச்சி கண்மாய் ஆகியவை உள்ளன.  இதில் நகரின் மையப் பகுதியிலேயே ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளம் அமைந்துள்ளது. அதேபோல் நகராட்சி அலுவலகம் அருகே திருப்பாற்கடல் குளம் அமைந்துள்ளது.

ஆண்டாள் கோவிலின் மிக முக்கிய திருவிழாவான எண்ணெய் காப்பு உற்சவம் திருமுக்குளத்தின் அருகே உள்ள எண்ணெய் காப்பு மண்டபத்தில் நடைபெறும். அதேபோல் திருவிழாவின்போது ஆண்டாள் கோயிலுக்கு தீர்த்தம் இங்கிருந்து எடுத்துச் செல்லப்படும். இத்தகைய சூழ்நிலையில் சரியான பராமரிப்பு இல்லாததால் திருப்பாற்கடல் குளமும் திருமுக்குளமும் சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு வரை ஆகாயத்தாமரை முளைத்து பாசி படர்ந்து மிகவும் சுகாதார கேடாக இருந்தது. இதனால் கோயில் குளத்தில் இருந்து அபிஷேகம் மற்றும் பூஜைக்கு தீர்த்தம் எடுப்பது நிறுத்தப்பட்டது இந்நிலையில் திருவில்லிபுத்தூர் நகராட்சியை திமுக கைப்பற்றி சேர்மனாக தங்கம் ரவி கண்ணன் பதவி ஏற்றார். இதன் பின்னர் பழமையும் தொன்மையும் பல்வேறு பெருமைகளும் உடைய இரண்டு கோயில் குளங்களையும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஆண்டாள் கோவில் குளத்தை சுமார் 15 நாட்களுக்கு மேலாக பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாசிகள், ஆகாயத்தாமரைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

இதேபோல் திருப்பாற்கடல் குளத்தையும் தூர்வாரி சுத்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. குளத்தின் கரையை பலப்படுத்தி பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் குளத்தைச் சுற்றி பாதுகாப்பாக கம்பி வேலியும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சுமார் ரூ.107 லட்சத்தில் திருப்பாற்கடல் குளம் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டது. குளத்தைச் சுற்றி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. குளத்தில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரைகள், பாசிகள், முட்புதர்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.  மேலும் குளத்தில் தண்ணீர் வற்றாமல் இருக்கும் வகையில் விருதுநகர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய கண்மாயான பெரியகுளம் கண்மாயில் இருந்து இரண்டு குழாய்கள் மூலம் தண்ணீர் விழும்படி செய்யப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் சேகரிக்கும் குளமாகவும் மாறி உள்ளது. இந்த சிறப்பு ஏற்பாடுகளை கலெக்டர் ஜெயசீலனும் பார்வையிட்டார். சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு வரை மிகவும் மோசமாக இருந்த கோயிலுக்கு சொந்தமான இரண்டு குளங்களும் தற்போது குப்பை கூளங்கள் ஏதும் இல்லாமல் சுத்தமாக பளிச் என காட்சியளிப்பது திருவில்லிபுத்தூர் பகுதி பொதுமக்களையும் பக்தர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக திருமுக்குளம் சுத்தமாக இருப்பதால் முக்கிய பூஜைகளுக்கு குளத்தில் இருந்து தீர்த்தம் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Tiruvilliputhur ,Municipality ,Balich ,Agayatthamara ,
× RELATED மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு