சிவகங்கை அருகே ஒக்கூரில் முகாம் வாழ் தமிழர்களுக்கு 90 வீடுகள் இறுதிகட்ட பணிகள் தீவிரம்

சிவகங்கை: சிவகங்கை அருகே ஒக்கூரில் முகாம் வாழ் தமிழர்களுக்கு ரூ.6 கோடி மதிப்பீட்டில் 90 வீடுகள் கட்டும் பணி, தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் வசித்து வரும் முகாம் வாழ் தமிழர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் வயது அடிப்படையில் மாதந்தோறும் உதவித்தொகை, அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்கள் வசிக்கும் வீடுகள் தகர கொட்டகை அமைக்கப்பட்டு இருந்த நிலையில் தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் அரசின் நிதியுதவியுடன் சில பகுதிகளில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. இந்நிலையில் திமுக ஆட்சி வந்த பிறகு தமிழக அரசே நேரடியாக முகாம் வாழ் தமிழர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 3 ஆயிரத்து 500 வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு சில இடங்களில் பணிகள் முடிவடைந்துள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் தாயமங்கலம், காரையூர், மூங்கில்ஊரணி, சென்னலக்குடி, ஒக்கூர், தாழையூர் ஆகிய 6 இடங்களில் முகாம் வாழ் தமிழர்கள் வாழும் பகுதிகள் உள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் வசித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் முகாம் வாழ் தமிழர்கள் மொத்தம் ஆயிரத்து 609 குடும்பங்களைச் சார்ந்த 3 ஆயிரத்து 242 பேர் உள்ளனர். ஒக்கூரில் மட்டும் 236 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஒரு குடும்பத்திற்கு 300 சதுர அடி வீடும், 20 சதுர அடி கழிப்பிடமும் என 320 சதுர அடியில் 88 தொகுப்பு வீடுகளும், 2 தனி வீடுகளும் மொத்தம் 90 வீடுகள் ரூ.4.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. இதர அடிப்படை வசதி மேம்பாட்டுப் பணிகள் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நடந்து, முடிவடையும் நிலையில் உள்ளன. ஒட்டு மொத்தமாக ரூ.6 கோடி நிதி இம்முகாமிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள முகாம் வாழ் தமிழர்களுக்கு இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் மேலும் 3 ஆயிரத்து 500 வீடுகள் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு இம்முகாமில் உள்ள மற்றவர்களுக்கும் வீடுகள் கட்டும் பணி நடைபெற உள்ளது. முகாம் தலைவர் சிவலிங்கம், செயலாளர் லூசியா மற்றும் நிர்வாகிகள் கூறுகையில், ‘‘தமிழ்நாடு முதல்வர் எங்களை தாயுள்ளத்தோடு கவனித்து வருகிறார். நாங்கள் வசிக்கும் பகுதியில் சமுதாயக்கூடம், விளையாட்டு மைதானம், விளையாட்டு உபகரணங்கள், ரேஷன் கடை, கூடுதல் கழிப்பிடங்கள் உள்ளிட்ட வசதிகள் கேட்டு மனு கொடுத்துள்ளோம். அவற்றையும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: